‘காந்தியார் நினைவு நாளில். அவரைக் கொன்ற கோட்சே பெயரைக் கூறத் தடையா?’ என்று திராவிடர் கழகம் சார்பில், மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை கிரைம் பிராஞ்ச் அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் சுப.முருகானந்தம் தலைமை தாங்கினார். தே.எடிசன் ராஜா, மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மண்டல செயலாளர் நா.முருகேசன், காப்பாளர் சே.முனியசாமி, திமுக வழக்கறிஞர் இராம.வைரமுத்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் பி.அமர்நாத், மாநில செயற்குழு உறுப்பினர் மா.கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்துரையாற்றிய தி.க. மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் வா.நேரு ஆகியோர் பேசும்போது, “பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் இந்து மகாசபையைச் சேர்ந்தவர்களும், காவிச்சாமியார்களும் கோட்சே ஆப்தேஸ்மிருதி நிவாஸ் ஆகிய இருவருக்கும் விழா நடத்தி அதில் கோட்சே & ஆப்தே பாரதரத்னா என்ற பெயரில் விருது வழங்குவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். காந்தி பிறந்த நாளன்றே அவ்வாறு அறிவித்திருப்பது, காந்தியாரை மட்டுமின்றி நாட்டையே இழிவுபடுத்தும் செயல். இப்படி அறிவித்த மதவெறியர்களைக் கண்டிக்கிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மேலும் பல போராட்டங்களை நடத்துவோம்” என்றனர்.
மாநில சட்டத் துறை இணைச் செயலாளர் நா.கணேசன் நிறைவுரையாற்றினார். மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவா நன்றி தெரிவித்தார்.