விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடாதது ஏன்? - பொதுச் செயலாளர் பழனிசாமி விளக்கம்


கோப்புப்படம்

மதுரை: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்ததுபோல விக்கிரவாண்டி இடைத் தேர்தலிலும் நடக்கும் என்பதால், அதிமுக போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுக எழுச்சியோடும், வலிமையோடும் உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அதிமுக எடுத்திருக்கும் முடிவுக்கும், ப.சிதம்பரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இது அவரது கட்சியில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அதிமுகவில் எடுக்கப்பட்ட முடிவு.

2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நடந்தது குறித்து அனைவருக்கும் தெரியும். அங்கு ஜனநாயகப் படுகொலை நடந்தது.வாக்காளர்களை ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைத்து வைப்பதுபோன்று அடைத்துவைத்து, அவர்களை திமுகவினர் கொடுமைப்படுத்தினர். அதை தேர்தல் ஆணைய அதிகாரிகள், காவல் துறையினர், அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் மாநில அரசுக்கு துணை போனார்கள்.

தொகுதியில் அமைச்சர்கள் முகாமிட்டு ஆட்சி அதிகாரம், பணபலத்தைப் பயன்படுத்தி அதிகமான பரிசுப் பொருட்களைக் கொடுத்து, தேர்தலில் தில்லுமுல்லு செய்தனர்.

ஈரோடு கிழக்கு போன்றே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் நடக்கும் என்பதால், அதிமுக போட்டியிடவில்லை. இடைத்தேர்தலைப் புறக்கணிக்க வேறு எந்தக் காரணமும் இல்லை.

அரசியல் கட்சிகள் அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற்றதாக வரலாறு கிடையாது. வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். 2026-ல் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்

x