பொது கலந்தாய்வில் பாரபட்சம்; உதகையில் மலையாள ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் நடந்த பொது கலந்தாய்வில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, மலையாள ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை மியாஞ்சிபேட்டில் உள்ள நகராட்சிப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு இன்று நடந்தது. கலந்தாய்வில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டி, மலையாள ஆசிரியர்கள் பள்ளியில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ஜெயசீலன் கூறும்போது, “கூடலூர் கல்வி மாவட்டத்தில், கூடலூர் ஒன்றாம் மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒரு ஆங்கில ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த இடத்துக்கு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் சாஜிதா பேகம், இடைநிலை ஆசிரியர்கள் சுரேஷ்குமார் மற்றும் சாஜகான் ஆகியோர் தகுதி வாய்ந்தவர்கள். சீனியாரிட்டி அடிப்படையில் இவர்களில் ஒருவருக்கு பணியிடம் வழங்க வேண்டும். இதற்காக இன்று உதகையில் நடந்த கலந்தாய்வுக்கு மூவரும் வந்தனர். ஆனால், கலந்தாய்வில் இவர்கள் மலையாள வழியில் பணி பெற்றவர்கள் என்று கூறி, இவர்களை கலந்தாய்வுக்கு கல்வித் துறை அதிகாரிகள் அழைக்கவே இல்லை. மேலும், ஆங்கில ஆசிரியர் பதவிக்கு மலையாளமோ, தமிழ் வழியில் படித்தவர்களையோ யாரையும் பணியமர்த்தலாம். மாறாக மலையாளம் ஆசிரியர்களை புறக்கணிக்கின்றனர்.

சீனியாரிட்டிபடி 3 மலையாள ஆசிரியர்கள் தான் தகுதி பெற்றவர்கள். இவர்கள் தமிழ் பாடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களை அழைக்காமல் கல்வித் துறை அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்கின்றனர். கல்வித் துறை அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவருக்கு பணியிடம் வழங்க, கலந்தாய்வுக்கு வந்த மலையாள ஆசிரியர்களை அழைக்காமல் அலட்சியப்படுத்துகின்றனர். இதனால், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து எங்கள் மாநில நிர்வாகிகளை கலந்தாலோசித்து, போராட்டம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம்” என்றார்.

இந்நிலையில், கலந்தாய்வை நடத்திய கூடலூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் சுடலை, குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் சுனிதா அந்தோணியம்மாள் ஆகியோரிடம் விளக்கம் கேட்டபோது, கூடலூர் மாவட்ட கல்வி அலுவலர் சுடலை பேசவில்லை. குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் சுனிதா அந்தோணியம்மாள், “பதில் கூறமுடியாது” என அலட்சியமாக தெரிவித்தார்.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அ.நாசருதீனிடம் கேட்டபோது, “கலந்தாய்வு நடக்கும் இரு நாட்கள் முன்னர் எங்கள் இயக்குநரிடம் ஆலோசித்தோம். அவர், ஆங்கில ஆசிரியர் பணியிடம் என்றாலும், மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க தமிழ் ஆசிரியர் தெரிந்திருப்பது சவுகரியமாக இருக்கும். எனவே, தமிழ் படித்தவர்கள் தமிழ் பள்ளிக்கும், மலையாளம் படித்தவர்கள் மலையாள பள்ளிக்கும் செல்லலாம். மலையாள ஆசிரியர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவர்கள் மலையாள பள்ளிக்கு செல்லலாம்” என்றார்.

x