முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சிவகாமி சென்னை மேயராக போகிறார் என்ற செய்தியும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் டாக்டர் ராமதாசை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக நிறுத்தப் போகிறது என்ற செய்தியும் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் சமூக வலைதளங்களில் ரெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்திருக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிவகாமி தோற்றுப்போனார். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிர்பாராதவிதமாக அதிமுக கூட்டணிக்கு அவர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, அவருக்கு சென்னை மாநகராட்சி தேர்தலில் 99-வது வார்டில் போட்டியிட ஒரு சீட் அதிமுகவால் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக வட்டாரத்தில், சிவகாமி ஜெயித்தால் அவர்தான் அதிமுகவின் சென்னை மேயர் என்பதாக பலரும் சொல்லி வருகிறார்கள். இதைச் செய்தியாளர்களும் சிவகாமியிடம் கேட்க, அதிமுக உறுதியாக சொல்லட்டும் பிறகு பார்க்கலாம் என்று பதில் சொல்லியிருக்கிறார்.
திடீரென கூட்டணியில் இணைந்து கூட்டணிக் கட்சியின் சார்பில் ஒரே ஒரு சீட்டு வழங்கப்பட்டு, அதில் தானே நிற்கும் சமூக சமத்துவப்படை நிறுவனர் சிவகாமியை மேயர் ஆக்குவதற்கு அதிமுக விரும்புமா? என்பது ஆயிரம் மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ இந்த செய்தி மிகப்பெரிதாக அலையடிக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் இது பரபரப்பை ஏற்படுத்த, இன்னொரு பக்கம் ஜனாதிபதி பதவிக்கு டாக்டர் ராமதாஸ் பெயரை பரிந்துரை செய்யப் போகிறார்கள் பாஜகவினர் என்பது இந்திய அளவில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் முக்கியமான பல பொறுப்புகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதை, தற்போது பாஜக தனது வழக்கமாக கடைபிடித்து வருகிறது. அதை வைத்து தமிழகத்திலிருந்து ஒருவர் ஜனாதிபதியாக்கப்படலாம் என்ற யூகங்கள், கடந்த சில நாட்களாக வலை தளத்தில் பரவி வருகின்றன.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தராஜன், அந்தப் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட இருக்கிறார் என்பதாக வெகுநாட்களாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஜனாதிபதியாகப் போகிறார் என்ற தகவல், மிகப்பெரிதாக பரவி இந்தியா முழுதும் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் மருத்துவர் ராமதாஸ் பற்றிய விவரங்களை கேட்டுள்ளதாகவும், அவர்கள் ராமதாஸ் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து அமித்ஷா பார்வைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் மருத்துவர் ராமதாஸ் ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி தோற்றுப் போனார். ஆனாலும் அவரை ராஜ்யசபா எம்பியாக ஆக்குவதற்கு அதிமுக உறுதுணையாக இருந்தது. அன்புமணி ராஜ்யசபா உறுப்பினர் ஆனார். அவருக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று டெல்லியிடம் பலவாறாகக் கேட்டுப் பார்த்தார்கள். ஆனால், அது ஒன்றும் நடக்கவில்லை. அப்படி மத்திய அமைச்சர் பதவியை கொடுக்க மறுத்தவர்கள், ஜனாதிபதி பதவியை தூக்கி ராமதாசுக்கு கொடுத்து விடுவார்களா என்று சிலர் காரணத்தோடு கேட்கிறார்கள்.
எது எப்படியோ ராமதாசுக்கு ஜனாதிபதி பதவி கிடைத்தால், ஒவ்வொரு தமிழனுக்கும் அது பெருமையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்த அளவுக்கு பாஜக தலைமை பெரிய மனது உள்ளவர்களா என்பதுதான் சந்தேகம். அதேபோல முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சிவகாமி சென்னை மேயராக முடிந்தால் வரவேற்கவும், போற்றத்தக்கதுமாக அது இருக்கும்.