திமுகவின் நிறுவனரும் தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளருமான அண்ணா, முதலமைச்சராகப் பதவி வகிப்பதற்கு முன்னதாக எழுப்பியதுதான் 'ஆட்டுக்கு தாடி எதற்கு, நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?’ எனும் கேள்வி. மத்திய - மாநில உறவுகளைப் பற்றிப் பேசும்போது அப்படியெல்லாம் பேசியிருந்தாலும் முதல்வராக ஆன பின்னர் அப்படி அண்ணா பேசவில்லை. அவர் முதல்வராக இருந்தபோது சர்தார் உஜ்ஜல் சிங் ஆளுநராக இருந்தார். இருவருக்கும் மற்றவர் மீது பரஸ்பரம் மரியாதை நிலவியது. ஆளுநர் எதிர் முதல்வர் எனும் மோதல் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்டதே இல்லை.
இன்றைக்கு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் சட்டப் பேரவைத் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியதற்குப் பிறகு அண்ணாவின் இந்தப் பேச்சு மீண்டும் பொது வெளியில் நினைவுக்கு வந்திருக்கிறது.
ஆட்டுக்கு தாடி போன்ற அல்லது தாடி என்றே சொல்லும் உரோம அமைப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் நாம் பெரும்பாலும் பார்ப்பது அதிக அடர்த்தியும் நீளமும் இல்லாத, பழைய சீன கார்ட்டூன்களில் சீனர்களைக் குறிக்கும் தாடியைப் போல இருக்கிறது. ஆனால் வெண் அல்லது பழுப்பு நிற தாடி வேந்தர் என்று கூறும் அளவுக்கு ஆடுகளுக்கு அடர்த்தியான நீண்ட தாடிகளும் உண்டு. இந்த தாடி மலைப் பிரதேசத்தில் வாழும் ஆடுகளுக்கு பனியால் ஏற்படும் குளிரைக் குறைக்க உதவுகிறது என்று விலங்கியலாளர்கள் கருதுகிறார்கள். அதன் உடல் முழுக்க உள்ள உரோமம் போக, வாய்க்குக் கீழேயும் தாடி வளர்வது குளிரைப் போக்கும் என்பதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. இந்தியாவில் உள்ள சில வகை ஆடுகள் ஐரோப்பிய – ஆசிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவையாம். இது வெப்பப் பிரதேசமாக இருப்பதால் தாடியின் அடர்த்தியும் நீளமும் தேவைக்கேற்ப குறைந்துவிட்டதைப் போலத் தெரிகிறது.
தாடி இருப்பதை வைத்தே அதை ஆண் ஆடு என்று அடையாளம் காணலாம் என்கிறார்கள். அப்படியானால் எல்லா ஆண் ஆடுகளுக்கும் தாடி நிச்சயம்தானே என்று கேட்டால், இல்லை – சில ஆண் ஆடுகளுக்கு தாடி வளர்வதில்லை என்கிறார்கள். சரி அப்படியானால் பெண் ஆடுகளுக்கு தாடி கிடையாது என்று கருதலாமா என்று கேட்டால், அதையும் சொல்ல முடியாது – சில பெண் ஆடுகளுக்கும் தாடி உண்டு என்கிறார்கள்.
என்ன அறிவியல் கருத்துகளய்யா, உண்டு அல்லது இல்லை என்று தெளிவாகச் சொல்வதுதானே என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் ஆண்களில் எல்லோருக்குமே மீசை- தாடி முளைப்பதில்லையே சிலர் கடைசி வரை அமுல்பேபியாகவே இருக்கிறார்களே? சில பெண்களுக்கு தாடி போல முடிகள் தவடையில் ஒன்றிரண்டு வளர்கின்றனவே? அவை ஹார்மோன் கோளாறுகளால் என்கிறார்கள்.
அரசியல் சட்டம் போலவே, இந்த அறிவியலும் இப்படி திட்டவட்டமாக இல்லாமல் நழுவுகிறது.
ஆளுநர் பதவி தொடர்பாக இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபையில் நடந்த விவாதங்களின்போது, ஆளுநரையும் தேர்ந்தெடுத்துவிட வேண்டும் என்று சிலர் கோரினார்கள். ஒரே உறையில் இரண்டு கத்திகள், அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் - கூடாது என்று மற்றவர்கள் நல்ல வேளையாக வாதிட்டு அதைத் தடுத்தார்கள். ஆளுநர் என்பவரை மத்திய அரசின் ஏஜென்டாகவே சட்டம் கருதுவதாக ஒருவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் பிரிட்டிஷாரின் சட்டத்தை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை ஒத்திருப்பதாகவும் கண்டித்தார். அது உண்மைதான் ஆனால் பிரிட்டிஷ் அரசில் இருந்த ஆளுநருக்கு இருந்தபடி அதிகாரமும் உரிமைகளும் இந்திய ஆளுநருக்குத் தரப்படவில்லை, இருந்தாலும் ஆளுநர் பதவி தேவைதான் என்று அந்த வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆளுங்கட்சி உடைந்து பெரும்பான்மை இழந்தாலோ, கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குள் முரண்பட்டு ஆட்சியைக் கவிழ்த்தாலோ ஏற்படக்கூடிய நிலைமையைச் சமாளிக்கத்தான் ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டது. தேசப் பிரிவினைக்குப் பிறகு மத்திய அரசுக்கு அதிக அதிகாரமும் உரிமைகளும் இருக்க வேண்டும் என்ற பொதுவான எண்ணத்தின் அடிப்படையிலேயே பிரிவினைவாதம் தலைதூக்கினாலே அதைத் தடுக்க அரசியல்சட்ட அங்கீகாரமுள்ள பதவியில் ஒருவர் அந்தந்த மாநிலத் தலைநகரங்களிலேயே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் ஆளுநர் பதவி தக்க வைத்துக்கொள்ளப்பட்டது. மாநில முதல்வராகவோ, மத்திய அமைச்சராகவோ ஆக்க முடியாத அரசியல் தலைவர்களுக்குத் தருவதற்கும் இந்த ஆளுநர் பதவிதான் பயன்படுகிறது.
ஆளுநர் என்பவர் அந்த மாநில அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆர்வம் காட்டி குளறுபடிகள் செய்யக் கூடாது என்பதற்காகவே, அவரவர் பிறந்த மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப்படக் கூடாது என்ற நியதி கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய ஆளுநர் காவல் துறைப் பணியில் அதுவும் உளவுப்பிரிவில் வேலைபார்த்தவர் என்பதால் தொடக்கம் முதலே ஆளும் திமுகவைவிட அதன் தோழமைக் கட்சிகளுக்கு ஆளுநரைக் கண்டாலே ஒருவித மிரட்சியும் நிலவுகிறது என்கிறார்கள் பாஜகவினர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருக்கும்போது, ஆளுநர் அமைச்சரவையின் முடிவை ஏற்று செயல்படுத்த வேண்டும். சட்டப் பேரவைகளைக் கூட்ட வேண்டும், பேரவை நடக்கும் நாட்களுக்கு ஒப்புதல் தர வேண்டும், மாநில அரசு இயற்றும் சட்டத்துக்கு கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும், மாநில அரசின் ஆலோசனைகளை மீறும் உரிமை ஆளுநருக்கு இல்லை. இதுவரை சரி, அடுத்துதான் வில்லங்கம் ஆரம்பமாகிறது. மத்திய அமைச்சரவையின் அனைத்து ஆலோசனைகளுக்கும் கட்டுப்பட்டவர் குடியரசுத் தலைவர். ஆனால் ஆளுநர், அரசியல் சட்டத்துக்கு முரணாகவோ, வேறு விதமாகவோ செயல்படும்போது ஆலோசனைகளை நிராகரிக்கும் உரிமை பெற்றவர். அத்துடன் மாநில அமைச்சரவைக்கு ஆலோசனைகள் கூறி வழிகாட்டுவதுடன், தேவைப்படும் நேரங்களில் எச்சரிக்கவும் கடமைப்பட்டவர். மாநில அரசின் செயல்பாடு குறித்து அவ்வப்போது மத்திய அரசுக்கு அறிக்கைகள் அனுப்ப வேண்டியவர்.
ஆளுநரை ஆட்டு தாடியுடன் ஒப்பிட்டது பொதுக்கூட்டப் பேச்சுக்கு சுவை கூட்டுவதற்காக. தாடி வளரும்போது எரிச்சலாக இருக்கும் – பார்க்கிறவர்களுக்கு அல்ல – தாடிக்காரர்களுக்கே. நாள்கள் செல்லச் செல்ல தாடியை நீவிவிடுவதே சுகமாக இருக்கும். தாடிக்கு வண்ணம் பூசி அழகுபடுத்தும் அளவுக்கு அது செல்லமாகவும் ஆகிவிடுகிறது.