நீட் விலக்கு மசோதாவை திருப்பிய அனுப்பிய ஆளுநர் டெல்லி பயணம்!


ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக வரும் 7-ம் தேதி டெல்லி செல்கிறார்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்குக் கோரி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுவைத்திருந்தார் ஆளுநர் ரவி. முதல்வர் ஸ்டாலின், இரண்டு முறை ஆளுநரை சந்தித்து நீட் விலக்கு சட்ட மசோதா தொடர்பாகப் பேசினார்.

இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை, 4 மாதங்களுக்குப் பிறகு ஆளுநர் ரவி நேற்று திடீரென தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைத்தார். ஆளுநரின் இந்தச் செயல் தமிழக மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இச்செயலைக் கண்டித்து இன்று மாநிலங்களவையில் திமுகவினர் குரல் எழுப்பினர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் தமிழக ஆளுநர் ரவி 3 நாள் பயணமாக வரும் 7-ம் தேதி டெல்லி செல்கிறார். அப்போது, பிரதமர், உள்துறை அமைச்சர், ஜனாதிபதியை சந்திப்பாரா என்பது குறித்து தெரியவரும். தமிழகத்தில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

x