‘எதிரிகளின் போலி ஆடியோ இது’- பெண் நிர்வாகி வழக்கில் முன்ஜாமீன் கேட்கும் அதிமுக எம்எல்ஏ


உயர் நீதிமன்ற மதுரை கிளை

கட்சியின் பெண் நிர்வாகியை அவதூறாகப் பேசிய வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ். இவருக்காக அதிமுகவைச் சேர்ந்த ரீட்டா என்பவர் தேர்தலில் செலவு செய்துள்ளார். தேர்தலில் மான்ராஜ் வெற்றி பெற்றதும் தேர்தலுக்காக செலவிட்ட பணத்தை, இன்னாசியம்மாள் என்பவர் மூலமாக மான்ராஜிடம் ரீட்டா கேட்டுள்ளார். இது தொடர்பாக மான்ராஜ், இன்னாசியம்மாள் ஆகியோர் செல்போனில் பேசிக்கொண்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

அதில், ரீட்டா குறித்து அவதூறாகவும், தகாத வார்த்தைகளாலும் மான்ராஜ் பேசியுள்ளார். இதுகுறித்து போலீஸில் ரீட்டா புகார் அளித்தார். இதன்பேரில் மான்ராஜ் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, மான்ராஜ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக, அரசியல் எதிரிகள் போலியான ஆடியோ பதிவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதை செய்துள்ளனர். இதனால் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனு சென்னையிலுள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

x