‘இவர்களை பொறுப்பாக்க முடியாது’: நெல்லை பள்ளி தாளாளர், முதல்வர் மீதான வழக்கு ரத்து


இடிந்து விழுந்த தனியார் பள்ளி கழிப்பறை சுவர்

நெல்லையில் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக பள்ளியின் தாளாளர், முதல்வர் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி எஸ்.என்.ஹைரோட்டில் மாநகராட்சி அலுவலகத்தையொட்டி 143 ஆண்டுகள் பழமையான சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் 17.12.2021-ல் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி மாணவர்கள் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஸ் ஆகிய 3 மாணவர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளித் தாளாளர் செல்வகுமார், தலைமையாசிரியை ஞானசெல்வி, காண்ட்ராக்டர் ஜான்கென்னடி ஆகியோரை நெல்லை டவுன் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி தாளாளர் செல்வக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில், “கழிப்பறை சுவர் 2007-ல் கட்டப்பட்டது. 14 ஆண்டுக்கு பிறகு இடிந்து விழுந்துள்ளது. அந்த நேரத்தில் தமிழகம் முழுதும் பலமாக மழை பெய்து கொண்டிருந்தது. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்துவிழுந்துள்ளன. மழையால் கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. நான் 3 மாதங்களுக்கு முன்புதான் தாளாளார் பணியில் சேர்ந்தேன். இதனால் என்னை வழக்கில் சேர்த்தது தவறு. இந்த வழக்கால் எனக்கு களங்கம் ஏற்படும். எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இதேபோல் பள்ளி தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வியும், வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இரு மனுக்களையும் விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், “பள்ளியில் இடிந்து விழுந்து கழிப்பறை சுவர் பல ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சில மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளனர். இதனால் சம்பவத்துக்கு மனுதாரர்களை பொறுப்பாக்க முடியாது. எனவே இருவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. ஒப்பந்ததாரர் மீதான வழக்கை போலீஸார் தொடரலாம்” என கூறியுள்ளார்.

x