சட்டமன்ற மசோதாவை ஆளுநர் எப்படி திருப்பி அனுப்பலாம்?


செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா

நீட் விலக்கு மசோதா குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடத்தக் கோரி, திருச்சி சிவா கொடுத்த நோட்டீஸுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், முழக்கம் எழுப்பி அவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

நீட் விவகாரம் குறித்தும் ஆளுநரின் நடவடிக்கை குறித்தும் விவாதிக்க கோரி, மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். ஆளுநரின் செயல் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “ஆளுநரின் அதிகாரம் தொடர்புடைய பிரச்சினை இது. பாஜக ஆளும் மாநிலங்களிலும் நாளை இதுபோன்று நடக்கலாம். ஒரு மாநில சட்டமன்றம் அனுப்ப கூடிய மசோதாவை ஆளுநர் எப்படி திருப்ப அனுப்ப முடியும்” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, “கேள்வி நேரம் தேவையில்லை என்றால்கூட பரவாயில்லை. தமிழக எம்பிக்களின் கோரிக்கை குறித்து தற்போது விவாதிக்க அனுமதிக்க முடியாது. கேள்வி நேரத்தில் பேச முடியாது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசுங்கள்” என்றார்.

இதையடுத்து, வெங்கையா நாயுடு அனுமதி மறுத்ததை கண்டித்தும், நீட் விலக்கு கோரியும் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, “தமிழக முதல்வர் 2 முறை ஆளுநரை சந்தித்து நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்ப வலியுறுத்தியும் அவர் அனுப்பவில்லை. அவர் கூட்டாட்சி உணர்வுக்கு எதிராக செயல்பட்டார். இதை மாநிலங்களவையில் முன்னிலைப்படுத்த விரும்பினோம். ஆனால் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், சிபிஐ (எம்), சிபிஐ, திரிணமூல் காங்கிரஸ், ஆர்ஜேடி, தமுமுக ஆகியவை வெளிநடப்பு செய்தன” என்று கூறினார்.

திமுக எம்பி கனிமொழி

இதனிடையே, திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஆளுநர் அரசுக்கே திருப்பி அனுப்பி இருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. ஒரு மாநிலத்தின் தேவையையும், அதன் பிரச்சினைகளையும் களைய அந்த மாநிலத்தை ஆளும் அரசுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உரிமை இல்லை என்று சொல்வதாகவே ஆளுநரின் செயல் அமைந்திருக்கிறது. மாநிலத்தின் உணர்வை மதிக்காமல் அதன் உரிமையைப் பறிக்கும் நிலை - ஜனநாயகத்தைக் கேள்விக்குறி ஆக்குகிறது” என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

x