அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதத்தில் மூடவும்!


டாஸ்மாக்

‘தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும்’ என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், டாஸ்மாக் வருமானத்தை வைத்துதான் அரசே நடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அரசு மூட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கூறிவருகின்றனர். அதே நேரத்தில், டாஸ்மாக் கடைகளை மூடுவதற்குப் பதிலாக புதிதாக கடைகளை திறந்து வருகிறது தமிழக அரசு.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் அருகில் அமைந்துள்ள பார்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால்வரித் துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி. மாறாக டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பார்களை நடத்த அனுமதியில்லை.

டாஸ்மாக் கடை அருகேயுள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனுமதிக்க முடியாது” என்று நீதிபதி உத்தரவிட்டதோடு, “டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்த டாஸ்மாக் நிர்வாகத்தின் வழக்கை தள்ளுபடி செய்து, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை 6 மாதத்துக்குள் மூட வேண்டும்” என நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

x