நெரூர் சதாசிவ பிரம்மேந்திர கோயில் விழா - உண்ட இலையில் அங்க பிரதட்சணம் செய்ய ஐகோர்ட்  அனுமதி


மதுரை: நெரூர் சதாசிவ பிரம்மேந்திர கோயில் ஆராதனை விழாவில் பக்தர்கள் உண்ட இலையில் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கரூர் மாவட்டம் நெரூர் சதாசிவ பிரம்மேந்திர கோயிலில் ஆண்டு தோறும் சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை விழா நடைபெறும். ஆராதனை நிறைவு நிறைவு நாளில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக அனைத்து பக்தர்களும் உண்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்வது வழக்கம். பக்தர்கள் உண்ட இலைகளில் அங்க பிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் கடந்த 2015-ல் தடை விதித்தது.

இந்நிலையில் இந்தாண்டு சதாசிவ பிரம்மேந்திர கோயிலில் நாளை (மே 18) நடைபெறும் ஆராதனை விழாவில் பக்தர்கள் உணவருந்திய பிறகு உண்ட இலையில் பக்தர்கள் அங்கபிரதட்சனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கரூரைச் சேர்ந்த நவீன் குமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவில், பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்வது அவரவர் சுய விருப்பம். இந்த பழக்கம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த பழக்கத்துக்கு தடை விதிப்பது வழிபாட்டு உரிமையை மீறுவதாகும். எனவே உண்ட இலையில் அங்கப் பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் தாளை முத்தரசு, ராமகுரு ஆகியோர் வாதிடுகையில், ‘விழாவில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதில்லை. இதனால் அனுமதி வழங்க வேண்டும்’ என்றனர். இதையடுத்து நீதிபதி, கிராமங்களில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஆன்மீக விஷயங்களுக்கு அனுமதி தேவையில்லை. சாதி மத பேதமின்றி எவ்வித பாகுபாடும் இன்றி பக்தர்கள் ஒன்றாக அன்னதானம் உண்டு நேர்த்திக்கடன் செய்ய எவ்வித அனுமதியும் தேவையில்லை. பக்தர்கள் உண்ட இலையில் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்ய தடை இல்லை என உத்தரவிட்டார்.

x