‘கட்சி தாவினால் வீடு தேடி வந்து வெட்டுவேன்’ -மிரட்டல் அதிமுக நிர்வாகி மீது வழக்கு பாய்ந்தது!


கட்சித்தாவ மாட்டோம் என தர்காவில் உறுதிமொழி எடுத்த கோவா காங்கிரஸ் வேட்பாளர்கள்

உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக்காக சாத்தூரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், கட்சியினருக்கு கொலை மிரட்டல் விடுத்த, ஒன்றிய செயலாளர் மீது காவல்துறை வழக்கு பாய்ந்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக்காக, அதிமுகவினர் பங்கேற்ற கூட்டமொன்று ஜன.28 அன்று சாத்தூரில் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி என்பவரின் பேச்சு சர்ச்சைக்கு ஆளானது. ’அதிமுக வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எவரேனும் கட்சி தாவினால், அவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரும். அவர்களை வீடு தேடி வந்து வெட்டுவோம். அதில் என்னுடையது முதல் வெட்டாக இருக்கும்’ என்று ஆரம்பித்து கொலை, போஸ்ட்மார்ட்டம் என ஆட்சேபகரமான வாசகங்களை உதிர்த்தார்.

இதனால் அதிருப்தியடைந்த கட்சி நிர்வாகிகள் சிலர், சண்முகக்கனி மைக் பிடித்து பேசிய சர்ச்சை பேச்சினை பொதுவெளியில் பரப்பிவிட்டனர். உள்ளரங்க கட்சிக் கூட்டமாக அமைந்தபோதும், பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த அதிமுக ஒன்றிய செயலாளரின் பேச்சு அனைத்து கட்சியனர் மத்தியிலும் அதிகம் பகிரப்பட்டது.

இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடத்திய சாத்தூர் போலீஸார், சண்முகக்கனி அவ்வாறு மிரட்டல் விடுத்து பேசியதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிமுக எதிர்க்கட்சி வரிசைக்கு மாறிய சூழலில், நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலின் கணிசமான வெற்றிகள் மூலம், தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் அதிமுகவில் வெற்றிபெறுவோர், ஆளுங்கட்சியான திமுக பக்கம் எளிதில் சாய்ந்துவிடுவார்களோ என்ற அச்சமும் அவர்களை பிடித்தாட்டுகிறது. இதன் பிரதிபலிப்பாகவே சாத்தூர் சம்பவம் போன்றே பல்வேறு ஊர்களிலும் அதிமுக வேட்பாளர்களிடம் கட்சி நிர்வாகிகள் கடுமை காட்டி வருகின்றனர்.

தமிழகத்தின் இந்த உள்ளாட்சி தேர்தல் களேபரம் போலவே, வடக்கே நடைபெற உள்ள 5 மாநிலத் தேர்தலிலும் கட்சித் தாவலுக்கு எதிராக பாஜக அல்லாத கட்சிகள் பீதியடைந்துள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் பிரத்யேக பாணியாக, மாற்றுக்கட்சி மக்கள் பிரதிநிதிகளை கட்சித்தாவல் செய்வித்து ஆட்சியை பிடித்திருக்கிறது பாஜக. அல்லது கட்சித்தாவல் மூலம் எதிர்க்கட்சிகளை இல்லாமல் செய்திருக்கிறது. எனவே நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அம்மாதிரியான தாவல் விபரீதங்களை தடுப்பதற்காக எழுத்துவழி உறுதிமொழி முதல் வாய்மொழி சத்தியப் பிரமாணங்கள் வரை பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களிடம் பெற்று வருகின்றன.

கோவா சட்டப்பேரவைக்கான 2017 தேர்தலில், 17 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையாக வென்றிருந்த காங்கிரஸைவிட, 13 இடங்களைப் பிடித்த பாஜகவே ஆட்சி தலைமையிலான ஆட்சியே அமைந்தது. அடுத்த வந்த 5 ஆண்டுகளிலும் பாஜகவின் சித்துவிளையாட்டுக்களால், கோவா காங்கிரஸில் 2 எம்எல்ஏக்கள் மட்டுமே மிச்சமுள்ளனர். இதனால் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டோரை, கோயில், சர்ச், மசூதி என சகல மதவழிபாட்டுத் தலங்களிலும் வைத்து ‘கட்சி தாவல் செய்ய மாட்டோம்’ என்று சத்தியம் வாங்கியிருக்கிறது காங்கிரஸ்.

ஆம் ஆத்மி கட்சியோ, வேட்பாளர்களின் வாய்மொழி மீது நம்பிக்கையின்றி உறுதிமொழி பத்திரத்தில் பகிரங்கமாக கையெழுத்து வாங்கிய பின்பே வேட்பாளர் பட்டியலை உறுதி செய்திருக்கிறது. அந்த உறுதிமொழியில் அடங்கியுள்ள நிபந்தனைகளை அக்கட்சி வெளியிடவில்லை. இதர கட்சிகள் எம்மாதிரியான நிபந்தனைகளை வேட்பாளர்களுக்கு விதித்திருக்கின்ற என்ற தகவல் பொதுவெளியில் வெளியாகவில்லை. சாத்தூர் முதல் கோவா வரை கட்சித்தாவல் அச்சம் இந்தளவுக்கு கட்சிகளை பிடித்தாட்டுகின்றன.

x