பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவுதினத்தையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரையின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளில் வாலஜா சாலையில் இருந்து அண்ணா நினைவிடத்திற்கு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் பேரணியாக சென்று மரியாதை செலுத்தினர். ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோயில்களில் நடைபெறும் அன்னதான நிகழ்வும் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே அண்ணா நினைவு நாளையொட்டி, சென்னை மெரினாவில் அண்ணா சதுக்கத்தில் உள்ள நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆள் உயர மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட திரளானோர் அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினர். அண்ணா நினைவிடத்தைத் தொடர்ந்து கலைஞர் நினைவிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கும் மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்திய அவர், அங்கிருந்து புறப்பட்டார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'அண்ணா என்று தமிழ்நாடே அன்புடன் அழைக்கும் இம்மண்ணின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரத்து முழங்கிய கொள்கைகள் இன்று இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் எதிரொலிக்கின்றன; மாநில சுயாட்சிக்கான குரல் வலுப்பெறுகிறது. பேரறிஞர் காட்டிய வழியில் எந்நாளும் பயணிப்போம்!' என்றார்.
இதேபோல், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் உள்பட அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக, ஓபிஎஸ் தனது ட்விட்டர் பதில், "கட்டுப்பாடும் ஒழுங்கும் சாதாரணமானவைதான்; ஆனால் சாதாரண விஷயங்கள் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடை போட முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நம் மாநிலத்திற்கு "தமிழ்நாடு" என பெயர் சூட்டி தனி அடையாளத்தை உருவகப்படுத்திய தமிழ்ச் சமூக முன்னேற்றத்தின் ஆணிவேர், நம் கழகத்தின் சமுக, பொருளாதார, அரசியல் கொள்கை தொகுப்பான அண்ணாயிசம் (Annaism)-தின் அடித்தளமான, நம் பேரறிஞர் அண்ணா நினைவை, புகழை போற்றி வணங்குவோம்!" என்று கூறப்பட்டுள்ளது.