குமரியின் தமிழ் ஆளுமை புலவர் சுயம்புலிங்கம் மறைவு


புலவர் சுயம்புலிங்கம்

குமரி மாவட்டத்தின் மூத்த படைப்பாளர்களில் ஒருவரும், தீவிர தமிழ்ப்பற்றாளருமான புலவர் சுயம்புலிங்கம் இன்று காலமானார். அவரது மறைவு, குமரி மாவட்ட படைப்பாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தங்கள் அன்றாடப் பணிகளுக்கு மத்தியில் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்யும் பலரையும் பார்த்திருப்போம். ஆனால், தமிழுக்கு ஆற்றும் தொண்டையே தன் அன்றாடப் பணியாக்கி வாழ்ந்துவந்தவர் புலவர் சுயம்புலிங்கம். அந்த அளவுக்குத் தமிழ்ப் பற்றாளரான இவர், எம்ஏ ஆங்கிலம் பயின்றவர்.

இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சுயம்புலிங்கத்துக்கு, 71 வயதான சூழலிலும் விடாத தமிழ்ப் பாசத்தால், தமிழ் பரப்பும் துண்டுப் பிரசுரங்களோடு நாகர்கோவிலைச் சுற்றிவந்தவர். தமிழ் மீது கொண்ட அன்பால், அறநிலையத் துறை பணியில் இருக்கும்போதே எம்ஏ தமிழ் இலக்கியமும் படித்தார் சுயம்புலிங்கம். கம்பராமயணம் தான் இவரைத் தமிழ்ப் பற்றாளர் ஆக்கியிருக்கிறது.

அதைப்பற்றி காமதேனு இணைய இதழிடம் ஒருமுறை அவர் பகிர்ந்தபோது, “அறநிலையத் துறை பணியாளராக நெல்லையில் பணிசெய்தபோது, திருநெல்வேலி மாவட்ட கவிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தேன். அப்போது, தேவநேயப் பாவாணருக்கு ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என விரும்பினேன். அப்போது ஒரு கவிஞரே, ‘தேவநேயப் பாவாணர் யார்?’ எனக் கேட்டுவிட்டார். அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. மறுநாளே கவிஞர்கள் சங்கத்தின் அங்கத்தினர்களைத் திரட்டி தேவநேயப் பாவாணருக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் எனச் சொன்னேன். உடனே, அதற்குரிய நிதி ஆதாரம் சங்கத்தில் இல்லையே எனச் சொன்னார்கள். அதனால் நானே சொந்த செலவிலேனும் நடத்திவிடுவது என முடிவெடுத்தேன்.

இப்போது இருப்பதைப் போல அப்போதெல்லாம் நினைத்தவுடன் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் எடுத்துவிட முடியாது. அதுவும் முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே அதிலிருந்து பணம் எடுக்க முடியும். எனக்கு உடல்நலமில்லை எனக் காரணம் சொல்லி 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று தேவநேயப் பாவாணருக்கு விழா எடுத்தேன். 10 நாட்கள் விழா நடத்தினேன். அனைத்துப் பள்ளி - கல்லூரி மாணவர்களையும் அழைத்து போட்டிகள் நடத்தினேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தன் வாழ்வின் கடைசி நொடிவரை தமிழுக்காகத் தொடர்ந்து சேவை செய்து வந்த சுயம்புலிங்கம், 7 புத்தகங்களும் எழுதியிருக்கிறார். கடைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்பது தொடங்கி, தமிழில் உரையாட வலியுறுத்துவது, தமிழின் பெருமைகளை அடுத்தத் தலைமுறைக்கு கடத்துவது என அவர் நடத்திவந்த ‘தமிழ் நல மன்றம்’ என்னும் அமைப்பின் மூலமும் பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாரடைப்பால் இன்று புலவர் சுயம்புலிங்கம் காலமானது, குமரி இலக்கியவாதிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

x