அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தற்போதைய மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ.6.5 கோடி சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத் துறை.
திமுகவில் மீன்வளத் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2001-2006-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது கால்நடை மற்றும் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக 4.9 கோடி ரூபாய் சொத்துக்குவித்ததாக 2006-ம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் சட்டவிரோத பணப் பரிவர்தணை நடைபெற்றதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தணை நடந்தது தெரியவந்ததை அடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவுசெய்தது.
இதையடுத்து 2001-2006-ம் ஆண்டு காலக்கட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் வாங்கிய ரூ.6.5 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் கொண்ட 18 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.