நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பது தொடர்பாக வேட்புமனு தாக்கல் முடிவடையும் வரையில், சில ஊர்களில் கூட்டணி கட்சிகளிடையே இழுபறி நீடிக்கிறது.
சில கட்சிகள் போதிய இடம் கிடைக்கவில்லை என்றதும் கூட்டணியை விட்டே விலகிவிட்டன. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு கட்சி ஒரே ஒரு கவுன்சிலர் சீட்டுடன் திருப்தியடைந்துவிட்டது. அதுவும், கட்சியின் தலைவரே அந்த கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட சம்மதித்திருக்கிறார்.
அவர் வேறு யாருமல்ல எழுத்தாளரும், சமூக சமத்துவப்படை தலைவருமான சிவகாமி ஐஏஎஸ். சென்னை மாநகராட்சி 99-வது வார்டு கவுன்சிலராக களமிறங்கவிருக்கும் அவர் இதுபற்றி கூறும்போது, “எம்பி, எம்எல்ஏ போன்ற தேர்தலில் போட்டியிட்ட அனுபவமுள்ள நான், முதன்முறையாக சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுகிறேன். 99-வது வார்டில் எனக்கு அறிமுகமானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதிமுக என்னை மேயர் வேட்பாளராக அறிவித்தால் மகிழ்வேன். அதற்கு முன்னதாக நான் கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெற வேண்டும். அதிமுக அதிக வார்டுகளை கைப்பற்ற வேண்டும். எனவே என்னை மேயர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து இப்போதே பேசுவது சரியல்ல” என்று கூறியிருக்கிறார்.