ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த விபத்து: தனியார் பேருந்து ஓட்டுநரின் உரிமம் 5 ஆண்டுகளுக்கு ரத்து 


கோப்புப் படம்.

சேலம்: ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில், பேருந்து ஓட்டுநர் ஜனார்த்தன் என்பவரின் ஓட்டுநர் உரிமத்தை வட்டாரப் போக்குவரத்துத்துறை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்தது.

ஏற்காடு மலைப்பாதையின் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே கடந்த ஏப்ரல் 30-ம் தேதி தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில், சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 65 பேர் காயமடைந்தனர். கோடை விடுமுறைக்காக, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் ஏற்காடு வந்து கொண்டிருந்த நிலையில், மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்தது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் காயம் அடைந்த தனியார் பேருந்தின் ஓட்டுநரான ஏற்காடு வாழவந்தியைச் சேர்ந்த மணி என்கிற ஜனார்த்தனன் மீது வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டியது, உயிரிழப்பு ஏற்படுத்தியது உள்பட 4 பிரிவுகளில் ஏற்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், விபத்து நிகழ்ந்த இடம், விபத்தில் சிக்கிய பேருந்து ஆகியவற்றை சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொ) தாமோதரன் ஆய்வு மேற்கொண்டார். அதில், விபத்தில் சிக்கிய பேருந்து, தகுதியான நிலையில் இருந்ததை ஆய்வின் மூலம் உறுதிபடுத்தினார். ஓட்டுநர் ஜனார்த்தனன், பேருந்தினை கவனக்குறைவாக இயக்கி, விபத்து ஏற்பட காரணமாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, தனியார் பேருந்தின் ஓட்டுநர் ஜனார்த்தனின் ஓட்டுநர் உரிமத்தை, 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்து, சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொ) தாமோதரன் உத்தரவிட்டார். விபத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதில், ஓட்டுநர் ஜனார்த்தன் குற்றவாளி என்பது உறுதியானால், அவரது ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யவும், வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் காவல்துறைக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.