நீலகிரியில் போட்டியிடும் முன்னாள் கவுன்சிலர்கள், நிர்வாகிகள்!


பாமா

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுக மற்றும் திமுகவில், முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் வாய்ப்பை கைப்பற்றி உள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்றுவரை சுயேச்சைகள் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்ட நகராட்சிகளில், கவுன்சிலர்கள் பதவிக்கான வேட்பாளர் பட்டியல் அதிமுக மற்றும் திமுக சார்பில் நேற்று முன்தினம் இரவுதான் அறிவிக்கப்பட்டது. இதில், முன்னாள் கவுன்சிலர்களும், நிர்வாகிகளும் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்த முறை 50 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், பல கவுன்சிலர்கள் தங்களது மனைவி, மகள்களை களமிறக்கியுள்ளனர்.

உதகை நகராட்சியில் கணவன், மனைவி இருவருமே போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளனர். முன்னாள் கவுன்சிலர் கு.சண்முகம் என்கிற சம்பத், கடந்தமுறை போட்டியிட்ட 30-வது வார்டு பெண்கள் வார்டாக அறிவிக்கப்பட்டதால், தனது மனைவி எஸ்.வசந்தகுமாரியை களமிறக்கி உள்ளார். இந்நிலையில், அவர் 18-ம் வார்டில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார்.

குருமூர்த்தி

இதேபோல கடந்தமுறை துணைத் தலைவராக இருந்த வி.கோபாலகிருஷ்ணன் போட்டியிட்ட வார்டு, பெண்கள் வார்டாக மாறியதால், தனது மகள் கோ.ஸ்ருதிகிருஷ்ணாவுக்கு சீட்டை பெற்றுள்ளார்.

உதகை நகராட்சி தலைவர் பதவி பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், தலைவர் பதவியை குறிவைத்து முன்னாள் மாவட்டச் செயலாளர் பால. நந்தகுமார் தனது மனைவி பாமாவுக்காக 21-வது வார்டில் போட்டியிட சீட் பெற்றுள்ளார்.

முன்னாள் நகரச் செயலாளர் சுரேஷ்குமார், இந்நாள் நகரச் செயலாளர் சண்முகம், முன்னாள் நகர்மன்ற தலைவர் சத்திய பாமா ஆகியோரும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில், சுரேஷ்குமார், சத்தியபாமா, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அதிமுகவிலிருந்து வெளியேறி மீண்டும் கட்சியில் இணைந்தவர்கள்.

திமுகவில் நகரச் செயலாளர் எஸ்.ஜார்ஜ் தனது வார்டு பெண்கள் வார்டாக மாற்றப்பட்டதால், 14-வது வார்டுக்கு மாறியுள்ளார். தனது சொந்த வார்டில் தனது ஆதரவாளரின் மகளை களமிறக்கியுள்ளார். 21-வது வார்டான மெயின் பஜாரில் போட்டியிட, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரணி துணை அமைப்பாளர் நாகராஜின் மனைவிக்கு சீட் மறுக்கப்பட்டு, மாவட்ட துணைச் செயலாளர் ஜே.ரவிகுமாரின் ஆதரவாளரான முன்னாள் கவுன்சிலர் வாணீஸ்வரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோடப்பமந்தையைச் சேர்ந்த இவர் மெயின்பஜாரில் போட்டியிடுகிறார்.

மெயின்பஜார் வார்டு பெண்கள் வார்டாக மாறியதால், அப்பகுதியில் பல முறை வெற்றிபெற்ற தம்பி இஸ்மாயிலுக்கு, காந்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாசிம்ராஜா

இதேபோல குன்னூர் நகராட்சியில் கடந்த 2014-ம் ஆண்டு நீலகிரி எம்பி தேர்தலில் பாஜக சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்து, வேட்புமனு நிராகரிக்கப்பட்ட குருமூர்த்தி அதிமுகவில் இணைந்தார். இவர் தற்போது கவுன்சிலராக போட்டியிட சீட் பெற்றுள்ளார்.

திமுக சார்பில் நகராட்சி முன்னாள் தலைவர் எம்.ராமசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் பத்பநாபன், ஆரோக்கியதாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் தனது வாரிசான வாசிம்ராஜாவை இம்முறை 12-ம் வார்டில் களமிறக்கியுள்ளார்.

x