உதகை: அரசியலமைப்பு சட்டத்தை முத்தமிட்டு வணங்க வேண்டிய இக்கட்டில் பிரதமர் மோடி இருப்பதற்கு முதல்வர் ஸ்டாலினே காரணம் என்று ஆ.ராசா தெரிவித்தார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நீலகிரி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் மூன்றாவது முறையாக எம்.பி-யாகத் தேர்வாகியிருக்கிறார் ஆ.ராசா. இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகனை தோற்கடித்து, 2.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நீலகிரி மாவட்டத்துக்கு இன்று வந்தார். குன்னூர், உதகை, கூடலூர் ஆகிய பகுதிகளில் கட்சி நிர்வாகிளைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று, பொது மக்களிடம் நன்றி கூறி பேசினார். உதகை சேரிங்கிராஸ் காந்தி சிலை பகுதிக்கு வந்த ஆ.ராசாவுக்கு, தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து அங்கு அவர் பேசியதாவது: நாற்பதுக்கு நாற்பது என்ற நமது இலக்கை தமிழ்நாட்டில் மக்கள் சாத்தியப்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வெற்றி இது. மற்ற மாநிலங்களில் ஒரு இடத்தையாவது மற்றவர்கள் பிடித்திருக்கிறார்கள். பெரியார், அண்ணா, கலைஞர் உருவெடுத்த திராவிட தத்துவ மண் என்பதை மக்கள் புரிய வைத்திருக்கிறார்கள். இந்த வெற்றி முதல்வர் ஸ்டாலினுக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும் கிடைத்த வெற்றி.
இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என விரும்பினோம். ஆனால், கொஞ்சம் தள்ளிப்போயிருக்கிறது. பா.ஜ.க-வின் சர்வாதிகாரத்தை தடுக்கும் வலிமையோடு எதிர் அணியில் இருக்கிறோம். மோடியின் பிம்பம் உடைக்கப்பட்டிருக்கிறது. மதிக்க மாட்டோம் என சொல்லிக் கொண்டிருந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வணங்கி முத்தமிட வேண்டிய இக்கட்டுக்கு மோடியை தள்ளிய பெருமை தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினையேச் சேரும். இவ்வாறு அவர் பேசினார்.
சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன், உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், துணை செயலாளர் ரவிகுமார், நகர செயலாளர் ஜே.ரவிகுமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.