தேர்தலை முன்னிட்டு உரிமம்பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல் துறை உத்தரவு


கைத்துப்பாக்கி

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உரிமம்பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதைத் தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடாமல் தடுக்க, உரிமம்பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தமதுதுப்பாக்கிகளை தற்காலிகமாக காவல் நிலையங்களில் ஒப்படைப்பது வழக்கம்.

அதன்படி தமிழகம் முழுதும் உள்ள தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அவர்களது சொந்த பாதுகாப்புக்காக உரிமம்பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர்.

அவ்வாறு வைத்துள்ள துப்பாக்கிகளை, காவல் துறை கேட்கும்போது கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு அனுமதிக்கப்படுகிறது. அதனடிப்படையில் தமிழகம் முழுதும் உரிமம்பெற்று வைத்துள்ள 22,000 துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் சென்னையைப் பொறுத்தவரை உரிமம்பெற்ற 2,800-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

x