சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் மேற்குப் பகுதியில் உள்ள ராஜா முத்தையா சாலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரத்தில் வசித்துவந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கிருந்து அகற்றப்பட்டு, கண்ணப்பர் திடல் பகுதியில் உள்ள வீடற்றோர் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்துவரும் இம்மக்கள், அடிப்படை வசதிகளின்றி கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
இதற்கிடையே, தாங்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதாக இங்குள்ள மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில், சாலையோரம் வசித்துவந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டு வீடற்றோர் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கேபி பூங்கா பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு மேலாக இன்னல்களை அனுபவித்துவரும் தங்களுக்கு, ஏன் குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகள் ஒதுக்கப்படவில்லை என்று இங்கு வசிப்பவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், பூ, பழம் விற்கும் சிறு வியாபாரிகள் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருவாயில் வாழ்க்கை நடத்துகின்றனர்.
வசிப்பறை, வரவேற்பறை, படுக்கை அறை என வீடுகளில் இயல்பாக இருக்கும் அம்சங்களே இங்கு இல்லை. பெரும்பாலான குடும்பங்கள் பயன்படுத்தும் பொருட்கள் திறந்தவெளியில்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. சமையலும் திறந்தவெளியில்தான் நடக்கிறது.
பெண்கள் உடை மாற்றிக்கொள்ளக்கூட இடம் இல்லை. இல்லறம் நடத்தக்கூட இடம் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்கள் இங்குள்ள மக்கள்.
இருக்கும் சுவர்களிலும் விரிசல்கள். சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழலாம் எனும் அபாயச் சூழல். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் இவர்கள் வாழ்கிறார்கள். காற்றோட்டம் இல்லாத, சூரிய வெளிச்சம்படாத இருண்ட அறைகள் மனிதர்கள் வசிக்கத் தகுதியில்லாத நிலையில் காணப்படுகின்றன.
மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு எதுவும் செய்யவில்லை எனக் குமுறுகிறார்கள்.
குடிநீர், மின்சாரம், தனித்தனியான கழிப்பிடம் என அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் மக்கள் பிரதிநிதிகளிடம் மன்றாடி முறையிட்டுத்தான் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றைப் பெறுகிறார்கள். ஆனால், அனைத்தும் பெயரளவில்தான் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, இன்னல்கள் இன்று வரை தொடர்கின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் இங்கு வந்து பார்வையிட்டதில்லை என்றும் இம்மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.
மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் இங்குள்ளவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் சொல்லி மாளாதவை.
விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என அரசு தங்களுக்கு அளித்த அத்தனை ஆவணங்களையும் ஆட்சியரிடம் திருப்பிக் கொடுப்பது என இம்மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் சகித்துக்கொண்டுதான் இங்குள்ளவர்கள் வாழ்கிறார்கள். ஆனால், எத்தனை காலம் இவர்கள் பொறுமை காக்க முடியும்?
முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இம்மக்கள் மன்றாடுகிறார்கள். கோட்டையின் சுவர்களில் இந்தக் குரல்கள் எதிரொலிக்குமா?