தமிழகத்தில் முதன்முதலாக ஆன்லைனில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு!


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு

தமிழகத்தில் முதன்முறையாக, பொதுப் பிரிவினருக்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்கியுள்ளது. வரும் 5-ம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், கலந்தாய்வு நடைமுறையில் மாறுதல்கள் செய்யப்பட்டு, ஆன்லைனில் பதிவு செய்வதை மட்டும் 30-ம் தேதி காலை 10 மணிக்கு https://tnmedicalselection.net/ மற்றும் https://www.tnhealth.tn.gov.in/ ஆகிய சுகாதாரத் துறை இணையதளங்களில் தொடங்கியது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 24,949 பேர் இடம்பெற்றுள்ள நிலையில், பொதுப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 1 முதல் 10,456 பேருக்கு (நீட் மதிப்பெண் - 710 முதல் 410 வரை) அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பிப்ரவரி 5-ம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. வரும் 7-ம் தேதி சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். 15-ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. 16-ம் தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். 17-ம் தேதி முதல் 22-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

x