மதம்மாற வற்புறுத்தியதால்தான் மாணவி தற்கொலை: பாஜக விசாரணைக் குழு தகவல்


பாஜக விசாரணைக் குழு

தஞ்சை, மைக்கேல்பட்டி பள்ளியில் படித்த மாணவி, மதம்மாற வற்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று பாஜகவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவியின் மரணம் குறித்த உண்மை நிலையை அறிய பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தியா ரே, தெலங்கானாவைச் சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்ரா தாய் வாக், கர்நாடகாவைச் சேர்ந்த கீதா விவேகானந்தன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர், மாணவியின் ஊரான அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்துக்கு இன்று வந்தனர்.

அங்கு மாணவியின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர்களிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட அவர்கள், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தினர். குழு உறுப்பினரான முன்னாள் எம்பி விஜயசாந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மாணவியை மதம்மாற வலியுறுத்திய நிலையில், அதற்கு சம்மதிக்காததால், தொடர்ந்து வற்புறுத்தியுள்ளனர். அதனால்தான் மாணவி தற்கொலை செய்துள்ளார். மாணவி தங்கிய இல்லம் காலாவதியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டன. பெயர் பெற்ற பள்ளி என சொல்லப்படும் நிலையில், விடுதிக்கான உரிமத்தைப் புதுப்பிக்க தவறியுள்ளனர். மாணவியை கொடுமைப் படுத்தியுள்ளனர்.

பாஜக வின் போராட்டத்தால்தான் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மதம்மாற்ற முயற்சிப்பது குறித்து கான்வென்ட்டில் படிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் யோசிக்க வேண்டும். இந்த விசயத்தில், முதல்வர் அமைதியாக இருப்பதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இதில் முதல்வர் யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்? இந்த சம்பவத்தை ஆளும் திமுக அரசு திசைமாற்ற முயற்சிக்கிறது.

மதத்தை வைத்து வாக்குவாங்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாணவி தற்கொலை விவகாரத்தில் போலீஸ் அராஜகம் செய்வதாகவும், இப்படிதான் சொல்ல வேண்டும் என போலீஸார் கட்டாயப்படுத்துவதாகவும் பெற்றோர் கூறி உள்ளனர். கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை.

இறந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவரை இப்பிரச்சனையை பாஜக விடாது. மதமாற்ற நடவடிக்கை முயற்சிக்கு இத்துடன் முடிவுகட்ட வேண்டும்” என்று விஜயசாந்தி கூறினார்.

x