21 வயது மாணவி மாநகராட்சித் தேர்தலில் போட்டி


மோனிகா

கும்பகோணம் மாநகராட்சிக்கான தேர்தலில், 21 வயது இளம் மாணவி ஒருவர் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் 23-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளராக ஆர். மோனிகா என்பவர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி நிர்வாகிகள் மத்தியில் அறிமுகம்

முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ரமேஷின் மகளான மோனிகா, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படித்து வருகிறார். 23-வது வார்டில் ஏற்கெனவே அவரது தந்தை ரமேஷ் உறுப்பினராக இருந்திருக்கிறார். இம்முறையும் அவரே போட்டியிட வேண்டும் என்று அந்த வார்டில் உள்ள அதிமுகவினரும் பொதுமக்களும் ரமேஷிடம் வற்புறுத்தி இருக்கின்றனர். அந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், தனது சார்பில் தனது மகளை நிறுத்துவதற்கு மகளிடம் விருப்பம் கேட்டிருக்கிறார். மோனிகாவும் விருப்பம் தெரிவித்த நிலையில், கட்சியில் விருப்ப மனு அளித்திருந்தனர். அவர்களுக்கே சீட் வழங்கப்பட்டிருக்கிறது.

கும்பகோணம் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நடைபெறும் முதல் தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் இளம் வயது மாணவி வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளது அதிமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

x