நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. 6 ஆண்டுகள் கழித்து தனித்துப் போட்டியிடும் ஃபார்முலாவுக்குத் திரும்பியிருக்கிற பாஜக, பழைய தேர்தல் வரலாற்றை மாற்றி எழுதுமா?
ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில் 1998, 2004 என மக்களவைத் தேர்தலில் இருமுறை பாஜகவோடு கூட்டணி அமைத்திருக்கிறார். அதில், 1998-ல் சிறப்பான வெற்றியும், 2004-ல் படுதோல்வியும் கிடைத்தது. 2014 மக்களவைத் தேர்தலில் மோடியும் பிற பாஜக தலைவர்களும் அதிமுக கூட்டணிக்கு எவ்வளவோ முயன்று பார்த்தும் ஜெயலலிதா அசைத்து கொடுக்கவில்லை.
புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றிபெற்றுக் காட்டினார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை வழிநடத்திய ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பாஜக - அதிமுக கூட்டணியை அமைக்கும் நிலைக்கு ஆளானார்கள்.
இதன் காரணமாக 2019 மக்களவைத் தேர்தல், 2019-21 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் என அதிமுக - பாஜக கூட்டணி அச்சு பிசகாமல் தொடர்ந்தது. பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுகவில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டாலும், அக்கூட்டணியைத் தொடர்வதில் ஒபிஎஸ் - ஈபிஎஸ் தீவிரமாகவே இருந்தார்கள். ஆனால், இப்போது யாருமே எதிர்பாராத நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக - பாஜக கூட்டணி முறிந்திருக்கிறது.
30 சதவீத இடங்கள், 5 மேயர்கள் என்று தொடங்கிய பாஜக, 20 சதவீத இடங்களுக்கு இறங்கி வந்தது. ஆனால், அதிகபட்சமாக 10 சதவீதத்துக்கு மேல் ஒதுக்க முடியாது என்று அதிமுக கறார் காட்டியது மட்டுமல்லாமல், நாகர்கோவில், கோவை மேயர் பதவிகளை விட்டுக் கொடுக்க முடியாது என்று கை விரித்ததால் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.
சரி, கூட்டணி முறிந்துவிட்டது. இதற்கு முன்பு தனித்துப் போட்டியிட்டபோது பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருந்தது?
2019-ல் தொடங்கி அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தபோதே, நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்று பாஜக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பேசி வந்தனர். இதேபோல பாஜக Vs திமுக என்ற நிலையை ஏற்படுத்துவதில் பாஜகவும் முனைப்புக் காட்டி வந்தது. சில ஆண்டுகளாகவே திமுக - அதிமுக லாவணி கச்சேரிகள் மாறி, அது திமுக - பாஜகவினர் இடையே தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சமூக ஊடகங்களில் இக்கட்சித் தொண்டர்கள் மாறி மாறி விமர்சித்துக்கொள்வதைக் காண முடிகிறது. இதையெல்லாம் முன் வைத்துதான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதாகப் பேசுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.
இந்த சூழலில், பாஜக தனித்துப் போட்டியிடுவதன் மூலம், தமிழகத்தில் அக்கட்சி வளர்ந்திருக்கிறதா, அதன் வாக்கு வங்கி உயர்ந்திருக்கிறதா என்பதை அறிய அக்கட்சிக்கு மட்டுமல்ல மக்களுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வட இந்தியாவைப் போல தமிழகத்திலும் இந்துத்துவா வாக்கு வங்கி பக்கம் மக்கள் சாய்கிறார்களா இல்லையா என்பதையும் தேர்தல் முடிவுகள் உணர்த்தலாம். கடந்த 20 ஆண்டு காலத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டபோது 3 சதவீத வாக்குகளைக்கூட தாண்டவில்லை. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் 2 சதவீதம், 2009 மக்களவைத் தேர்தலில் 2.3 சதவீதம், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 2.2 சதவீதம், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 2.86 சதவீத வாக்குகளையே பாஜக பெற்றிருந்தது.
தமிழகத்தில் கடைசியாக 2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, 820 மாநகராட்சி வார்டுகளில் 4-ல் வெற்றி; 120 நகராட்சித் தலைவர் பதவிகளில் 2-ல் வெற்றி; 3,697 நகராட்சி வார்டுகளில் 37-ல் வெற்றி; 529 பேரூராட்சித் தலைவர்களில் 13-ல் வெற்றி; 8,299 பேரூராட்சி வார்டுகளில் 185-ல் வெற்றி பெற்றது.
ஆக, 6 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பாஜக, கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டபோது பெற்ற வெற்றி, வாக்கு சதவீதத்தைத் தாண்டினால், அக்கட்சித் தலைவர்கள் சொல்வதைப் போல பாஜக வளர்ந்திருக்கிறது என்ற பேச்சுகள் உண்மைதான் எனக் கருதலாம். அதற்கு பிப்ரவரி 22 வரை காத்திருக்க வேண்டும்!