புதுச்சேரி அரசு பள்ளியில் உலகத் தரத்தில் கூடைப்பந்து மைதானம் திறப்பு


புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பள்ளியிலேயே முதல் முறையாக சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சம் செலவில் உலகத் தரம் வாய்ந்த கூடைப்பந்து மைதானம் கிராமப் பகுதியிலுள்ள குருவிநத்தம் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கிராமப் பகுதியான பாகூர் தொகுதியில் குருவிநத்தம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் உலக தரத்திலான கூடைப்பந்து மைதானம் இன்று திறக்கப்பட்டுள்ளது. தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் தனியார் நிறுவன அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும் புதுச்சேரி அரசு பள்ளிகளிலேயே உலகத் தரத்தில் அமைந்துள்ள முதல் கூடைப்பந்து மைதானம் இதுவாகும். அதேபோல் இந்த விழாவில் பாகூர் மற்றும் பாகூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10 அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கான மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டன.

இது பற்றி எம்எல்ஏ செந்தில் குமார் கூறுகையில்,"எனது தொகுதியில் இளைஞர்கள் நேர்வழியில் செல்லவும் தவறான பழக்கத்தில் தடம் மாறக்கூடாது என பல திட்டங்களை செயல்படுத்துகிறேன். குறிப்பாக என்னுடைய எம்எல்ஏ அலுவலகத்தை நூலகமாக மாற்றினேன். எம்எல்ஏ அலுவலகத்தில் அரசு வேலைவாய்ப்பிற்கான பயிற்சி மையம் அமைத்து துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.

இளைஞர்களை விளையாட்டில் அதிகம் ஈடுபடுத்துவதற்காக தனது சொந்த செலவில் 10 க்கும் மேற்பட்ட கிரிக்கெட் மைதானங்களை ஏற்படுத்தி தந்தேன். அதையடுத்து எடுத்த முயற்சியில் தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் குருவி நத்தம் அரசு பள்ளியில் உலகத்தரத்திலான கூடைப் பந்து மைதானம் தற்போது திறக்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டார்.

x