மதுரை மாநகராட்சி வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ முழுக்க முழுக்க தன்னுடைய ஆதரவாளர்களுக்கே வாய்ப்பு வழங்கியிருப்பதாக, அதிமுகவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ‘சீட்’ கிடைக்காத முக்கிய நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் அந்த வார்டுகளில் சுயேச்சையாக போட்டியிடவும், உறவினர்களை களம் இறக்கவும் தயாராகி வருவதால், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 100 வார்டு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் மேயர் பதவியை குறிவைத்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் குடும்பத்தில் இருந்தும், முன்னாளர் மேயர் விவி.ராஜன் செல்லப்பா குடும்பத்தில் இருந்தும் யாரும் கவுன்சிலர் தேர்தலில் நிறுத்தப்படவில்லை. ஆளும்கட்சியான திமுகவை எதிர்த்து அதிக கவுன்சிலர்கள் வெற்றிப்பெறுவது கடினம் என்றும், அப்படியே ஓரளவு கவுன்சிலர்கள் வெற்றிபெற்றாலும் மறைமுக மேயர் தேர்தலில் எதிர்க்கட்சியாக சாதிக்க முடியாது என்பதாலும் குடும்ப உறுப்பினர்களை களம் இறக்குவதை செல்லூர் கே.ராஜூவும், விவி.ராஜன் செல்லப்பாவும் தவிர்த்ததாக கட்சியினர் கூறுகின்றனர்.
தற்போது அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆதரவாளர்கள் எனக்கூறப்படுகிறது. மாநகர அதிமுகவில் செல்லூர் கே.ராஜூவை எதிர்த்து அரசியல் செய்த முக்கிய நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகளுக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் மண்டல தலைவர்கள் சாலை முத்து, கண்ணகி பாஸ்கரன் உள்ளிட்டவர்களுக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை.
இதில், சாலை முத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தால் வழக்கம்போல் ஆதரவாளர்களுக்கு மதுரை மாநகராட்சியில் கவுன்சிலர் ‘சீட்’ பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அதனால், கவுன்சிலர் ‘சீட்’ கிடைக்காத மாநகர அதிமுக நிர்வாகிகள் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களில் சிலர் சுயேச்சையாக போட்டியிடத் தயாராகி வருவதாகவும், சிலர் உறவினர்களை களம் இறக்க ஆயத்தமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. அதனால், மாநகராட்சி அதிமுக வேட்பாளர்களுக்கு செல்லூர் கே.ராஜூவால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செல்லூர் கே.ராஜூவை பொறுத்தவரையில் தன்னை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராகவோ, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆதரவாளராகவோ நேரடியாக காட்டிக்கொள்ள மாட்டார். தனக்கென்று ஒரு ஆதரவு வட்டத்தை மாநகர அதிமுகவில் வைத்துள்ளார். அந்த வட்டத்துக்குள் மற்றவர்களை வரவிடாமல் அரசியல் செய்வதால், மாநகர அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
மதுரை மாநகரத்தைப் பொறுத்தவரையில் திமுகவை விட அதிமுக செல்வாக்கான கட்சியாக கருதப்படுகிறது. அப்படியிருந்தும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோட்டைவிட்டது. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும், சொந்தக்கட்சி வேட்பாளர்களுக்கும் செல்லூர் கே.ராஜூ ஒத்துழைப்பு கொடுக்காததே காரணமாகக் கூறப்பட்டது.
கட்சித் தலைமை கட்சி தற்போது இருக்கும் சூழலில் எதிர்மறையான நடவடிக்கை எடுக்கமுடியாமல் செல்லூர் கே.ராஜூ தயார் செய்த பட்டியலையே வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. இது மதுரை மாநகராட்சி தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் சிக்கலையும், சோதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ‘சீட்’ கிடைக்காத முன்னாள் மாநகராட்சி வேலைக்குழு தலைவர் கண்ணகி பாஸ்கரன் மட்டும், சுயேச்சையாக போட்டியிட உள்ளார். மற்றவர்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து கண்ணகி பாஸ்கரன் கூறும்போது, ‘‘நான் 2 முறை கவுன்சிலராக இருந்துள்ளேன். எனக்கு சீட் கொடுக்கவில்லை. அதுபோல், முன்னாள் மண்டல தலைவர்கள் சாலை முத்து, ராஜபாண்டி, முக்கிய நிரவாகி ராஜா சீனிவாசன் உள்ளிட்ட வெற்றிவாய்ப்புள்ளவர்களுக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை. எங்களுக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டதற்கு எந்த காரணமும் இல்லை. தனிப்பட்ட முறையில் செல்லூர் கே.ராஜூவுக்கு எங்களைப் பிடிக்கவில்லை. கட்சிப்பணிகளில் எப்படி தனிப்பட்ட விறுப்பு, வெறுப்புகளை கொண்டு வரலாம்.
ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்கு ‘சீட்’ மறுக்க முடியுமா?. ஆனால், தற்போது கட்சித்தலைமை குறுநில மன்னர்கள் போல் செயல்படும் மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது. மதுரையில் தொண்டர்கள் எழுச்சியாக உள்ளனர். மக்களும் அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். ஆனால், செல்லூர் கே.ராஜூ கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார். கட்சித் தலைமை வேடிக்கை பார்க்கிறது.
கவுன்சிலர் தேர்தலை தவம்போல் எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், மூத்த கவுன்சிலர் என்றுகூட பாராமல் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. நான் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளேன். கண்டிப்பாக வெற்றிபெறுவேன்’’ என்றார்.
ஓபிஎஸ்சை சந்தித்த அதிருப்தியாளர்கள்
அதிமுக வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம்பெற்றவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு சாலைமுத்து, கண்ணகி பாஸ்கரன் உள்ளிட்ட முக்கிய மாநகர நிர்வாகிகள் நேற்று முன்தினமே ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமியை பார்க்க சென்னை சென்றுள்ளனர். பெருமுயற்சி செய்தும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிச்சாமியை கடைசிவரை பார்க்க முடிவியவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவரிடம் அதிருப்தியாளர்கள் முறையிட்டும், அவரது தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால், அனைவரும் விரக்தியில் மதுரை திரும்பியுள்ளனர்.