புதுச்சேரி: ரெஸ்போபார்களுக்கு புதுச்சேரி பாஜக அமைச்சர் சாய்சரவணக்குமார் திடீரென்று எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் முறையிட்டுள்ளார். ஆளுநரும் அதில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்துள்ளார்.
புதுவையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவரான முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக அரசு பொறுப்பேற்ற பின் கலால்துறை மூலம் ரெஸ்டோ பார்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. நகர பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் திறக்கப்பட்ட ரெஸ்டோ பார்களுக்கு புதுவை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாலை வரை இயங்கும் ரெஸ்டோ பார்களால் கலாசா சீரழிவு ஏற்டுவதாக அரசிய்ல் கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரின் தோல்விக்கு ரெஸ்டோ பார்களும் ஒரு காரணம் என்ற விமர்சனமும் பரவலாக எழுந்தது. இந்த நிலையில் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பாஜக அமைச்சர் சாய் சரவணகுமார் ரெஸ்டோ பார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் ராஜ்நிவாஸுக்கு சென்று துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். அப்போது ஊசுடு தொகுதியில் கல்லூரி, கோவில் அருகில் திறக்கப்பட்டுள்ள ரெஸ்டோ பார்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கலால்துறை முதல்வர் ரங்கசாமி வசம் உள்ள நிலையில் கூட்டணியான பாஜக அமைச்சரான சாய்சரவணகுமார் முதல்வரிடம்முறையிடாமல் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் சாய் சரவணன் குமார் வெளியிட்ட வீடியோவில் "ஆட்சி செய்பவர் மக்களுக்கு தீங்கு செய்யும் செயல்களை உடன் ஆராய்ந்து நீக்க வேண்டும் என திருவள்ளுவர் கூறியுள்ளார். ராஜ்நிவாஸில் துணைநிலை ஆளுநரை சந்தித்தேன். எனது ஊசுடு தொகுதியில் எனக்கு தெரியாமல் சில மாதங்களுக்கு முன்பு, தொண்டமாநத்தம் கிரைஸ்ட் கல்லுாரி எதிரிலும், துத்திப்பட்டு மாதா கோவிலுக்கும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் இடையில் திறக்கப்பட்ட ரெஸ்டோ பார்களை உடனடியாக அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ரெஸ்டோ பார்களையும், கூடப்பாக்கம் கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள பாரையும் அகற்ற ஆளுநரை சந்தித்து முறையிட்டேன். அவற்றை உடனடியாக மாற்றி தருவதாக உறுதி அளித்தார். மக்கள் நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் என்பணி இருக்கும்" என தெரிவித்துள்ளார்.