கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பப் பிரச்சினை காரணமாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர், காவலர்கள் அந்தப் பெண்ணைச் சாடியதுடன் அவரது புகாரை ஏற்காமல், “அங்கு போ இங்கு போ” என கூறி அலைக்கழித்துள்ளனர்.
அந்தப் பெண், பள்ளிக்கரணை போலீஸார் கூறியதுபோல் மற்றொரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது அங்கிருந்த காவலர்களும் அவரது புகாரை ஏற்கவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தப் பெண், நேராக தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் சென்று தனது புகாரை அளித்துள்ளார்.
அங்கிருந்த அதிகாரிகள் புகாரைப் பெற்றுக்கொண்டு, நடந்தவற்றை கேட்டறிந்தனர். பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் போலீஸார் நடந்துகொண்ட விதம் குறித்து, அதிகாரிகளிடம் தெரிவித்தார் அந்தப் பெண்.
அவ்வளவுதான்... தாம்பரம் காவல் ஆணையர் ரவி உடனே பள்ளிக்கரணை காவல் நிலையத்தை மைக்கில் தொடர்புகொண்டு, புகாரளிக்க வந்த பெண்ணிடம் புகாரைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைகழித்தது குறித்து கேட்டதுடன், அவர்களை கடுமையாகச் சாடினார்.
“புகாரளிக்க வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பள்ளிக்கரணை ஆய்வாளர் உட்பட அனைத்து காவலர்களையும் கூண்டோடு தனுஷ்கோடிக்கு மாற்றம் செய்துவிடுவேன். அங்கு கடல் அலையைத்தான் எண்ண வேண்டியிருக்கும்.
தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட அனைத்துக் காவல் நிலையங்களிலும் புகாரளிக்க வரும் பொதுமக்களிடம், புகாரைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத காவலர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். நீங்கள் எதற்காக போலீஸாக இருக்கிறீர்கள். காவலர்கள் பொதுமக்களின் சேவகர்கள் என்று கூறுகிறீர்கள். அப்படி இருக்கும்போது உங்கள் பணியை செய்ய ஏன் மறுக்கிறீர்கள்? மக்களை துன்புறுத்தும் எண்ணத்தில்தான் பணிக்கு சேர்ந்தீர்களா?
சைபர் குற்றம் தொடர்பாக வரும் புகார் மனுக்களைப் பெற்று புகார் அளித்தவர்களுக்கு, உடனே சிஎஸ்ஆர் வழங்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, வேலையை சரியாக பார்க்க வேண்டும். இல்லையென்றால் சும்மா விடமாட்டேன் கூண்டோடு தூக்கி விடுவேன்” என கூறினார்.
இதனால் பதற்றமடைந்த மாவட்ட காவல் அதிகாரிகள், காவல் ஆணையரை தொடர்புகொண்டு, பொதுமக்களிடம் புகாரைப் பெற்ற உடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.