தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், உண்மையை கண்டறிவதற்காக விசாரணை நடத்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டாஅமைத்த குழுவினர், இன்று அரியலூரில் உள்ள மாணவியின் இல்லத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து உயிரிழந்தார். அவர் படித்து வந்த பள்ளியில் அவரை மதம்மாற வற்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று பாஜக உள்ளிட்ட இந்துத்துவ கட்சிகள் பிரச்சினையைக் கிளப்பின.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக போராட்டத்தில் இறங்கியது. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
மாணவி மரணம் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரிக்க பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தியா ரே, தெலங்கானாவைச் சேர்ந்த நடிகை விஜயசாந்தி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்ரா தாய் வேக், கர்நாடகாவைச் சேர்ந்த கீதா விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய 4 பேர் குழுவை அமைத்தார். அக்குழுவினர் உள்ளிட்ட பாஜகவினர் இன்று அரியலூர் அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்துக்கு வந்தனர். அங்குள்ள, மாணவியின் இல்லத்துக்கு சென்று, அவரது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர்களிடம் விசாரணை செய்தனர்.
இன்று மேலும் பல இடங்களில் பலரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி, விசாரணை குறித்த விவரங்களை பாஜக தலைவரிடம் இக் குழு அறிக்கையாக அளிக்க உள்ளது.