94 வயதில் 13-வது தேர்தல் களம் காணும் இந்தியாவின் சீனியர் வேட்பாளர்


பிரகாஷ் சிங் பாதல்

இந்தியாவின் மிகவும் வயதான வேட்பாளர் என்ற சாதனையை படைத்திருக்கிறார், பஞ்சாப் முன்னாள் முதல்வரான பிரகாஷ் சிங் பாதல்(94).

கேரள முன்னாள் முதல்வரான அச்சுதானந்தன் தனது 92 வயதில் 2016 தேர்தலில் களமிறங்கியபோது, இந்திய வரலாற்றில் மிகவும் வயதான வேட்பாளர் என்ற சாதனை அவரைச் சேர்ந்தது. தற்போது 94 வயதில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் பஞ்சாப் பாதல், கேரள அச்சுதானந்தனின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

பிரகாஷ் சிங் பாதலின் அரசியல் வாழ்க்கையில் சாதனைகள் ஏராளம். பிளவுறாத பஞ்சாப்பில், தனது முதல் தேர்தல் வெற்றியை சாதித்த பாதல், 1969-ல் தொடங்கி 2017 வரை 10 முறை பஞ்சாப் தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறார். இடையில் ஒரு முறை 57 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்திருக்கிறார். இது தவிர்த்து, தனது அரசியல் வாழ்க்கையில் தோல்விகளையே அறியாதவர்.

பிரகாஷ் சிங் பாதல் தற்போது லாம்பி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனு செய்த வகையில், இது அவரது 13-வது சட்டப்பேரவைத் தேர்தலாகி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் இந்த லாம்பி சட்டப்பேரவை தொகுதியில் தொடர்ந்து 5 முறையும், அதற்கு முன்னதாக 5 முறையுமாக தொடர்ந்து 10 முறை வெற்றி பெற்றிருக்கிறார். மாநிலத்தின் முதல்வராகவும் 4 முறை பதவி வகித்திருக்கும் பாதல், மக்களவை எம்பியாகவும் ஒருமுறை தேர்வாகி இருக்கிறார்.

இந்தியாவின் சீனியர் வேட்பாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கும் பிரகாஷ் சிங் பாதல், அண்மையில் கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டிருப்பவர். மேலும் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் ஒரு கால் எலும்பு முறிவுற்றபோதும், அதிலிருந்து குணம் பெற்றவராய் பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் பஞ்சாபின் மூலை முடுக்கெல்லாம் வலம் வருகிறார். பாதலின் முதுமையை முன்னிட்டு இந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்காக, கட்சி சார்பில் பிரத்யேக பேருந்து ஒன்று அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்பட்ட ஹைட்ராலிக் இருக்கை மூலமாக வாக்களர்கள் முன்பாகத் தோன்றி, பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார் பிரகாஷ் சிங் பாதல்.

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரம்பிய பிராந்திய கட்சியான, ஷிரோமணி அகாலி தள் கட்சியின் சார்பில் இத்தனை வெற்றிகளை சாத்தியமாக்கி இருக்கிறார் பிரகாஷ் சிங் பாதல். இவரது மகன் சுக்பிர் சிங் பாதல் தற்போது அக்கட்சியின் தலைவராக இருக்கிறார்.

பிப்.20 அன்று நடக்கவிருக்கும் 117 தொகுதிகளுக்கான பஞ்சாப் தேர்தலின் முடிவில், மார்ச் 10 அன்று வாக்கு எண்ணிக்கை வெளியாக உள்ளது.

x