குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த காட்டெருமை ஒன்று, செல்போனில் படம் பிடித்தவரை வேகமாக முட்டித் தூக்கிவீசும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் உள்ள சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை உள்ளிட்ட வன விலங்குகள், அவ்வப்போது குடிநீருக்காவும், உணவுக்காகவும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். அந்த வகையில், குன்னூர் கன்னிமாரியம்மன் கோயில் சாலை வழியாக காட்டெருமை ஒன்று ஊருக்குள் நுழைந்தது. அந்த வேளையில் உள்ளூர்வாசி ஒருவர், மதுபோதையில் காட்டெருமையை செல்போனில் படம் பிடித்துள்ளார்.
அருகில் இருந்த பொதுமக்கள், அவரை நோக்கி காட்டெருமை வருகிறது, அங்கிருந்து செல்லுமாறு சப்தமிட்டனர். அவர் சுதாரிப்பதற்குள் எருமை எதிர்பாராத நேரத்தில் அவரை வேகமாக முட்டித் தூக்கிவீசியது. இதைக் கண்ட மக்கள் அலறினர். காட்டெருமை அங்கிருந்து ஓடிவிட்டது.
காட்டெருமை தாக்கியதில், அவருக்கு முதுகு மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்ட தகவலில் அவரது பெயர் சிவா என்பது தெரியவந்துள்ளது. வனத் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.