இலையைப் பிரிந்த தாமரை: இழப்பு யாருக்கு?


தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது, பாரதிய ஜனதா கட்சி. கூடுதல் இடங்களில் போட்டியிடுவதற்காகவே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி தொடரும் என்றும் அறிவித்திருக்கிறார் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. 2024 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அதிமுக தலைமைதான் முடிவு செய்யும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார் அதிமுகவின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார்.

இந்த விலகல் தொடர்பாக அதிமுகவினருக்கோ, பாஜகவினருக்கோ வருத்தம் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, ஒருவித நிம்மதி மட்டுமே தெரிகிறது. அதாவது, இருதரப்பினரும் ‘இது நல்ல முடிவு... லாபம் தரும் முடிவு’ என்றே கருதுகிறார்கள். உண்மையான கள நிலவரம் என்று கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடம் பேசியபோது, “உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் கூட்டணி பலம் எல்லாம் எடுபடாது. எந்த வார்டில் எந்தக் கட்சி செல்வாக்காக இருக்கிறதோ, எந்த வேட்பாளர் சொந்தச் செல்வாக்குடன் இருக்கிறாரோ அந்த வேட்பாளர்தான் வெற்றிபெறுவார். ஒரே வார்டில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என்று நான்கு கட்சிகளும் சம பலத்தில் இருந்தாலும்கூட, கூட்டணி கட்சியினரின் ஓட்டுகள் கூட்டணிக் கட்சிக்குத்தான் கிடைக்கும் என்று சொல்லவே முடியாது. இன்னும் சொல்லப்போனால், நாங்கள் செல்வாக்கான பகுதியில் கூட்டணி கட்சிக்குக் கொடுத்துவிட்டார்கள் என்ற அதிருப்தியில் எதிர்த்துத்தான் வேலை செய்வார்கள். எனவே, இந்தப் பிரிவு வார்டு அளவில் பல வெற்றிகளுக்கு வழிவகுக்கும்.

குமரி போன்ற மாவட்டங்களில் பாஜகவும் நிறைய வெற்றிகளைப் பெறும், அதிமுகவின் சிறுபான்மையின வேட்பாளர்களும் ஆங்காங்கே வெற்றிபெறும் சூழலை இது ஏற்படுத்தும். அதிமுக பாஜக கூட்டணி முழுமையாக முறியவில்லை என்பதால், தேர்தலுக்குப் பின் பேரூராட்சி, நகராட்சித் தலைவர்களைத் தேர்வு செய்யவும் அது உதவும். பொங்கல் பரிசு பொருள் விவகாரத்திலும், கரோனா நிவாரணம், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் உரிமைத்தொகை போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலும் திமுக அரசு மீது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி இருக்கிறது. எல்லாம் கை கூடிவரும் என்று நம்புகிறோம்” என்றார்கள்.

திமுகவினரிடம் கேட்டபோது, “கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். தண்ணிக்குப் போற குருடிக்குப் பத்து குருடி வழித்துணையாம் என்று. ஒரு குருடி தண்ணீர் கிணற்றுக்குப் போனால் அவள் மட்டும்தான் கிணற்றுக்குள் விழுவாள். 10 பேர் போனால் என்ன அங்க சத்தம் என்று பார்க்கப்போய் 10 பேரும் கிணற்றுக்குள் விழுவார்கள். மக்களவை, சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் ஒன்றாகப் போய் தோல்வியடைந்தவர்கள், இம்முறை தனித்தனியே தோல்வியடையப் போகிறார்கள் அவ்வளவுதான். அதிமுக கூட்டணியில் இருந்து விலகினால் கூடுதல் இடங்களில் போட்டியிடலாம் என்ற பாஜகவின் கனவு வேண்டுமானால் நிறைவேறும். ஆனால், கூடுதல் வெற்றிக்கு வாய்ப்பில்லை. அதேபோல பாஜக கூட்டணியில் இருந்து விலகினால், சிறுபான்மையினரின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று அதிமுக நினைக்கலாம். ஆனால், அது வாக்காக மாறும் வாய்ப்பே இல்லை. சிறுபான்மை மக்கள் அதிமுக மீது இன்னும் கோபத்தில்தான் இருக்கிறார்கள்” என்கிறார்கள்.

கட்சிக்காரர்களின் கணிப்பு சரியா இல்லையா என்பதை, மக்களின் சுட்டுவிரல்கள் தான் சொல்ல வேண்டும்.

x