மின்வாகன தயாரிப்பில் அசத்தும் பழநி இளைஞர்கள்


தங்கள் தயாரிப்புகளோடு...

தென்மாவட்டங்கள் தொழில் துறையில் பின்தங்கியிருக்கின்றன என்ற புலம்பல்கள் ஓயவில்லை என்றாலும், சத்தமில்லாமல் இளைஞர்கள் சிலர் இம்மாவட்டங்களில் புதிய புதிய தொழில் முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துவருகிறார்கள். ஏற்கெனவே, ஓர் இளைஞர் தேனி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கி அசத்தினார். அந்த வகையில், தற்போது திண்டுக்கல் மாவட்டம் பழநியில் மின்வாகன உற்பத்தியைத் தொடங்கி சாதித்திருக்கிறார்கள் இரு இளைஞர்கள்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ள அ.கலையமுத்தூரைச் சேர்ந்த கௌதம், ராஜேஷ் ஆகியோர்தான் அந்த இளைஞர்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் ஒன்றாகப் படித்தபோது நண்பர்களான இவர்கள், அடுத்து பொறியியல் படித்தாலும் தங்கள் நட்பைத் தொடர்ந்தார்கள். எலெக்ட்ரிக்கல் துறையில் ஈடுபடத் திட்டமிட்டு, பழநி அருகே உள்ள தாழையூத்தில் கடந்த 2011-ல் இந்தத் தொழிலில் இறங்கினார்கள். படிப்படியாக அந்நிறுவனம் வளர்ச்சியடைந்தது. இந்தியா மின்வாகன புரட்சிக்குத் தயாராகிக்கொண்டிருப்பதை உணர்ந்து, நாமும் இந்தத் துறையில் இறங்கினால் என்ன என்று யோசித்தனர். பரீட்சார்த்த முயற்சி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ‘கௌரா’ என்ற பெயரில் இ பைக் தொழிற்சாலையை அமைத்தார்கள். இப்போது அந்நிறுவன தயாரிப்புகள் சந்தையிலும் வெற்றிபெற்றிருக்கின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இவர்களுக்கு ஷோ ரூம்கள் இருக்கின்றன.

இதுகுறித்து நிறுவன பங்குதாரர்களான கௌதம், ராஜேஷ் ஆகியோர் கூறும்போது, “மின்வாகனங்களைப் பொறுத்தவரையில் பேட்டரிகள்தான் அவற்றின் இதயம். எனவே, நன்றாக உழைக்கும் மிகத்தரமான பேட்டரிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். இந்த வாகனங்களில் தயாரிப்பு முழுக்க முழுக்க தமிழ்நாட்டு கிராமச் சாலைகளையும் மனதில் வைத்தே மேற்கொள்ளப்படுவதால், வெளிநாட்டு மின்வாகனங்களைவிட உள்ளூரில் செயல்திறன் மிக்கவையாக இந்த வாகனங்கள் இருக்கும். மத்திய மாநில அரசுகள் இனி மின்வாகனங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் என்பதால், மேலும் செயல்திறன் மிக்க மின்வாகனங்களை தரமாகவும், விலை குறைவாகவும் தயாரித்துத்தர முடியும் என்று நம்புகிறோம்” என்றனர்.

x