தலைநகர் டெல்லியின் இந்தியா கேட்டில் நேதாஜிக்கு பிரம்மாண்டமான ‘ஹாலோகிராம்’ சிலை அமைத்து, அவருக்கு மிகப்பெரிய மரியாதையைச் செய்திருக்கிறது பாஜக அரசு. விரைவில், அந்த முப்பரிமாணத் தொழில்நுட்பச் சிலைக்குப் பதிலாக, கருங்கல்லால் செய்யப்பட்ட பிரம்மாண்டமான நேதாஜி சிலை அமைக்கப்படவிருக்கிறது. நேதாஜி பிறந்த தினத்தையொட்டி, பேரிடர் மேலாண்மையில் சிறப்பாகப் பங்களித்த தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ‘ஆப்தா பிரபந்தன் புரஸ்கார்’ விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதுமட்டுமல்ல, இனி குடியரசு தினக் கொண்டாட்டங்கள், நேதாஜி பிறந்ததினமான ஜனவரி 23-ம் தேதியிலிருந்தே தொடங்கிவிடும் என்றும் அறிவித்திருந்தார் மோடி. அதன்படி, இந்த ஆண்டு முதல் ஒரு வாரத்துக்குக் குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அத்துடன், ”விடுதலை பெற வேண்டும் என்ற நம்பிக்கையை புகுத்தியவர் நேதாஜி. கடுமையான சோதனைகளைச் சந்தித்தபோதும் ஆங்கிலேய அரசுக்கு அடிபணிய மறுத்தவர்” என்று புகழாரமும் சூட்டியிருக்கிறார். இவை அனைத்தும் நாடு முழுதும் உள்ள நேதாஜி பற்றாளர்களை பாஜக பக்கம் ஈர்க்க உதவும் என்று நம்புகிறார்கள் பாஜகவினர்.
நேதாஜி காங்கிரஸை விட்டு வெளியேறி ஃபார்வர்ட் பிளாக் கட்சியைத் தொடங்கியதில் இருந்து, தமிழ்நாடு ஃபார்வர்ட் பிளாக் தலைவராக இருந்தவர் பசும்பொன் தேவர். இந்நிலையில், நேதாஜிக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரம், தென்தமிழகத்திலும், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் வாழும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் எனும் பலமான நம்பிக்கை பாஜகவினரிடம் நிலவுகிறது. உண்மையில் கள நிலவரம் என்ன? நேதாஜி மீது பெரும் பற்று கொண்ட முக்குலத்தோரை மோடியின் இந்த நகர்வுகள் வசீகரிக்குமா?
அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் பி.வி.கதிரவனிடம் இதுபற்றிப் பேசினோம்.
“நேதாஜிக்கு இந்தியா கேட்டில் சிலை வைத்தது, அவர் தொடர்பான ஆவணங்களை மம்தாவைப் போலவே மோடியும் வெளியிட்டது போன்றவற்றை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், தனது காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கான கருவியாகவே நேதாஜியை பாஜகவினர் கையாள்கிறார்கள் என்ற தெளிவான புரிதல் எங்களுக்கு இருக்கிறது. நேதாஜியை காந்தியும் புறக்கணித்தார், நேருவும் புறக்கணித்தார், காங்கிரஸ் கட்சியும் புறக்கணித்தது என்பதில் எங்களுக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியும் சரி, ஃபார்வர்ட் பிளாக் கட்சியும் சரி பாதைகள் வேறுபட்டாலும் இரண்டும் விடுதலைக்காகப் போராடிய கட்சிகள். பாஜகவின் முன்னோடிகள் அப்படியில்லையே? சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாத ஒரு குழு, இன்று நேதாஜியைத் தூக்கிப்பிடிக்கிறது. காங்கிரசுக்கு எதிரான அலையில், நேதாஜி பக்தர்களை குறிப்பாக முக்குலத்தோர் மக்களை இணைத்துக்கொள்வதற்குத்தான் இதைச் செய்கிறார்கள். ஏற்கெனவே, ‘தேவர் அய்யா மீது எங்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது’ என்றும், ‘தேசியமும் தெய்வீகமும் எங்களுக்கும் இரு கண்கள்தான்’ என்றும் சொல்லி, தேவரின மக்களைக் கவர முயன்றார்கள் பாஜகவினர். அவர்களுக்கு உண்மையிலேயே தேவர் மீதும், நேதாஜி மீதும் பற்று இல்லை என்றே நாங்கள் கருதுகிறோம்” என்று பட்டவர்த்தனமாகப் பேசினார் கதிரவன்.
மேலும், “நேதாஜி பிறந்தநாளான ஜனவரி 23-ம் தேதியை தேச பக்தி தினமாக (தேஷ் பிரேம் திவஸ்) அறிவிக்க வேண்டும் என்று 25 ஆண்டுகளாக ஃபார்வர்ட் பிளாக் வலியுறுத்திவருகிறது. கூடவே, அவரது பிறந்தநாளை காந்தி ஜெயந்தியைப் போலவே தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திவருகிறோம். காங்கிரஸ் அரசைப் போலவே, இந்தக் கோரிக்கைகளை நிராகரித்த கட்சிதான் பாஜக. அவரது 125-வது பிறந்தநாளன்று ஜனவரி 23-ஐ எங்கள் கோரிக்கைக்கு மாறாக, 'பராக்கிரம தினம்' என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசு. அரசு விடுமுறையும் விடவில்லை. இதை எல்லாம் எங்கள் மக்களிடம் சொல்லி, பாஜகவின் ஆள்பிடிக்கும் வேலையை பார்வர்ட் பிளாக் தடுத்து நிறுத்தும்" என்று கதிரவன் கூறினார்.
தென்தமிழகத்தில் நேதாஜியின் புகழைப் பரப்புவதில் முன்வரிசையில் நிற்கும் இயக்கங்களில் ஒன்று 'நேதாஜி தேசிய இயக்கம்'. அதன் ஒருங்கிணைப்பாளர் நேதாஜி வே.சுவாமிநாதனிடம் இதுபற்றிப் பேசினோம்.
“எல்லாப் பிரச்சினையையும் அரசியல் கண்ணோட்டத்தோடு மட்டும் அணுகவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இன்றைய சர்வதேசச் சூழலில், இந்தியா தூக்கிப்பிடிக்க வேண்டிய ஆளுமை நேதாஜிதான் என்பதில் சந்தேகமே இல்லை. காரணம், நேதாஜி ஒரு சர்வதேசத் தலைவராகவும், யுத்த காலத் தலைவராகவும் பார்க்கப்படுகிறார். இதுவரையில் நாம் காந்திஜியை முன்வைத்து அமைதி, அகிம்சை என்று சொல்லியே மக்களை வளர்த்துவிட்டோம். அதன் விளைவு என்னானது என்றால், அண்டை நாடுகள் நம்மைச் சண்டைக்கு இழுக்கிறபோதும் நம்முடைய இளைஞர்கள் அமைதி, அகிம்சை என்றே பேசிக்கொண்டிருந்தார்கள்.
‘பூசாரியின் தர்மம் வேறு... போர் வீரனின் தர்மம் வேறு’ என்பார் அரவிந்தர். இப்போது போர் வீரனுக்கான தர்மம் தொடங்கியிருக்கிற காலம். சீனா என்றில்லை, எல்லா நாடுகளுமே தங்களுடைய வீரத்தையும், சர்வதேசத்தில் தன்னுடைய மேலாதிக்கத்தையும் நிறுவ முனைப்பு காட்டுகின்றன. இந்தியாவுக்கு ராணுவத்தால்தான் விடுதலை பெற்றுத்தர முடியும் என்று நம்பிய, அதைச் சாதித்தும் காட்டிய ஒரு தலைவர் வழியில் நடப்பதே யுத்த கால இந்தியாவுக்கு ஏற்றது. இன்று நம்முடைய தலைவர்கள் எல்லாம் இந்தியா எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழலில், நேதாஜி என்கிற சுப்ரீம் கமாண்டரைத் தவிர வேறு யாரை முன்னோடியாக முன்னிறுத்த முடியும்? எனவே, இந்திய அரசு அவரை உயர்த்திப் பிடிப்பது ராஜதந்திர ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சரியானதே” என்றார் சுவாமிநாதன்.
மேலும், “இந்தியா பல அச்சுறுத்தலுக்கு நடுவே இருக்கிற இந்தக் காலத்திலும்கூட, நம்முடைய இளைஞர்களுக்குக் கிரிக்கெட் பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தில் 100-ல் ஒரு பங்குகூட குடியரசு தின ராணுவ அணிவகுப்பைப் பார்ப்பதில் இல்லை. எனவே, இப்போது இந்தியா நேதாஜியை முன்னிறுத்துவதே சரி. இந்த நாட்டில் கட்சி அரசியலைத் தாண்டி, தேச பக்தி, தேசப் பாதுகாப்பை நேசிக்கிற மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்த மக்களை இன்றைய அரசு ஈர்க்கத்தான் செய்யும்’’ என்று உறுதியாகச் சொன்னார் சுவாமிநாதன்.
நேதாஜியை வைத்து பாஜக கையில் எடுக்கும் அரசியல் காய்நகர்த்தல்களில் முக்குலத்தோர் ஈர்க்கப்படுகிறார்களா என்பதை, தமிழக அரசியல் களத்தின் அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்திவிடும்!