காலையில் விலகல் அறிவிப்பு, மாலையில் பிரச்சாரம் தொடக்கம்


மோடி கண்ணனின் பிரச்சாரம்

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை, பாஜக தனித்துப் போட்டி’ என்று இன்று(ஜன.31) நண்பகலில்தான் அறிவித்தார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அதையடுத்து இன்று மாலையிலேயே, மயிலாடுதுறை நகராட்சி 25-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களிப்பீர் என்று தேர்தல் பிரச்சாரத்தை பாஜகவினர் தொடங்கி விட்டார்கள். அவர்களின் அசுர வேகம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

பாஜகவில், மயிலாடுதுறை நகர தலைவராக இருப்பவர் மோடி கண்ணன். இவர் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு மயிலாடுதுறை நகராட்சியை கேட்டு வாங்கி, நகராட்சி தலைவராக ஆகிவிட வேண்டும் என்று திட்டமிட்டு கடந்த சில மாதங்களாகவே பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கேட்ட இடங்கள் கிடைக்காததால் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகிக் கொள்வதாக மாநில தலைவர் அண்ணாமலை இன்று அறிவித்தார். அதனால் சோர்ந்து போய்விடாத மோடி கண்ணன், தனது மனைவியை மயிலாடுதுறை நகராட்சி 25-வது வார்டு வேட்பாளராக அறிவித்ததுடன், உடனடியாக பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்.

வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தான் இதுவரை மயிலாடுதுறைக்கு ஆற்றியுள்ள பணிகளையும், கட்சி மூலம் செய்துள்ள சேவைகளையும் பட்டியலிட்டு வேட்பாளரான தனது மனைவி காமாட்சிக்கு வாக்களிக்குமாறு தீவிர பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டுள்ளார். இன்னும் வேட்பாளர்களை இறுதி செய்யமுடியாத நிலையில் தங்கள் கட்சிகள் இருக்கும்போது, பாஜக இத்தனை வேகமாக பிரச்சாரத்தில் இறங்கி விட்டதைக் கண்டு திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆச்சரியத்தால் அதிர்ந்து போயுள்ளன.

x