நாகர்கோவில் மாநகரில் திமுகவுக்கு பொற்காலம்?


நாகர்கோவில் மாநகராட்சி

அதிமுகவுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தையின் தோல்விக்குப் பின், பாஜக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. அதிமுக, பாஜக கூட்டணியால் திமுகவுக்கு வலுவான போட்டியை உருவாக்கிய கன்னியாகுமரி மாவட்டத்தில், தற்போது திமுகவுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

எம்.ஆர்.காந்தி

தமிழகத்திலேயே தேசிய கட்சியான பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் துடிப்புடன் இருக்கும் மாவட்டங்களில் ஒன்று கன்னியாகுமரி. பொதுவாக இந்த மாவட்டத்தில், மத ரீதியாக வாக்களிக்கும் கலாச்சாரம் மிகத் தூக்கலாகவே உள்ளது. இந்துக்கள் பாஜகவையும், சிறுபான்மையினர் காங்கிரஸ் கட்சியையும் ஆதரித்து வருவது இம்மாவட்டத்தின் கள யதார்த்தமாக உள்ளது. இதற்கு சில கடந்தகால தேர்தல் வரலாறுகளை அலச வேண்டியதும் அவசியமாகிறது.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இங்கு தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. கூட்டணி இன்றி! இதுபோக அப்போது ஆளும்கட்சியாக இருந்த அதிமுகவும் தனித்து தேர்தலை சந்தித்தது. இதனால் சிறுபான்மையின வாக்குகள் சிதறிப்போக, பாஜக வென்றது. அந்தத் தேர்தலில் ஜெயித்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரும் ஆனார்.

அதுமட்டுமே விசயம் அல்ல. அந்தத் தேர்தலில் 2-ம் இடத்துக்கு காங்கிரஸ் வந்தது. தமிழகம் முழுவதும் 38 தொகுதிகளை அந்தத் தேர்தலில் வாரிச்சுருட்டிய அதிமுக, 3-வது இடத்துக்குத் தள்ளப்பட, திமுகவோ வைப்புத் தொகையையே பறிகொடுத்தது.

அதற்கு முந்தைய 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே தேர்தலை சந்தித்தன. திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் இருந்தன. மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவோடு, பாஜகவும் சேர்ந்து கொள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிகளில் அதிமுக கூட்டணி ஜெயித்தது.

குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை சிறுபான்மையினர் பெரும்பான்மையாக திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கும், இந்து வாக்குகள் அதிமுக, பாஜகவுக்கும் அளிப்பது காலம், காலமாகத் தொடர்கிறது. அதிமுகவும், பாஜகவும் ஒரே அணியில் இருக்கும்போது திமுகவை எதிர்கொள்ளும் வீரியம் பெறுவதும், தனித்தனியே தேர்தலைச் சந்திக்கும் போது திமுக கூட்டணி வலுவாக இருப்பதுமே கடந்தகால குமரி மாவட்ட அரசியல் வரலாறாக உள்ளது.

அந்தவகையில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் ஒரே கூட்டணியில் இருந்ததாலேயே நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜகவால் கரைசேர முடிந்தது. இத்தனைக்கும் நீண்டகாலமாக திமுகவில் மாவட்டச் செயலாளர், பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்தவர் என்னும் தகுதிகளைக் கொண்ட சுரேஷ்ராஜனை வீழ்த்தினார் பாஜகவின் எம்.ஆர்.காந்தி.

அதற்கு முந்தைய 2016 தேர்தலில் சுரேஷ்ராஜன் வெற்றிபெற்றபோது அதிமுகவும், பாஜகவும் தலா 45 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவின. 2021 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணி இரு தொகுதிகளை ஜெயிக்க அதிமுக, பாஜக கூட்டணியே காரணமானது. இப்போது அதிமுக, பாஜக கூட்டணி முறிந்துள்ளதால், நாகர்கோவிலில் திமுகவினர் கூடுதல் தெம்புடன் வலம்வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்து வாக்குகளில் அரசியல் கட்சிகள் சாராதவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுகவுக்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜகவுக்கும் வாக்களிக்கும் கலாச்சாரமும் இந்த மண்ணில் இருக்கிறது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் என்பது கட்சி, மதமெல்லாம் கடந்து வேட்பாளருக்கும், பகுதிவாசிகளுக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை முடிவாக பிரதிபலிப்பது ஆகும். இந்த ரேஸில் நாகர்கோவில் மாநகராட்சியில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே தேர்தலை சந்திப்பது யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? என்பது போகப் போகத்தான் தெரியும்.

x