ஒத்திவாக்கம்: தமிழக காவல் துறை சார்பில் தேசிய அளவில் பெண் போலீஸாருக்கான சிறப்பு துப்பாக்கி சுடும் போட்டிகள் இன்று வண்டலூர் அருகே ஒத்திவாக்கத்தில் தொடங்கியது. இதனை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் துப்பாக்கியால் சுட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார்.
தமிழக காவல் துறை சார்பில் தேசிய அளவில் பெண் போலீஸாருக்கான சிறப்பு துப்பாக்கி சுடும் போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. போட்டிகளை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் அ. அமல்ராஜ் துப்பாக்கியால் சுட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக நேற்று மாலை தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பங்கேற்று வெள்ளை நிற பலுான்களையும், புறாக்களையும் பறக்கவிட்டு போட்டியை தொடங்கி வைத்தார். தேசிய அளவில் பெண் காவலர்களுக்கான சிறப்பு துப்பாக்கி சுடுதல் போட்டிகள் இன்று ஜூன் 15ம் தேதி தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. 13 பிரிவுகளில் நடத்தப்படும் போட்டிகளில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட இந்திய காவல்துறை அமைப்புகள், மத்திய ஆயுதப்படைகளை சார்ந்த 30 அணிகளை சேர்ந்த 8 உயர் அதிகாரிகள் உட்பட 454 மகளிர் காவலர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.
இந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாடு வாரியத்தின் (AIPSCB) கீழ், காவல்துறை அமைப்புகள் மத்திய ஆயுதப் படைகளில் உள்ள ஆயுதங்கள் குறித்த மதிப்பிடுதல் மற்றும் தொழில்முறை திறன்களை மேம்படுத்துதலுக்கான நோக்கத்துடன் இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டியில், ரைபிள் பிரிவில் 5 போட்டிகளும், பிஸ்டல் ரிவால்வர் பிரிவில் 4 போட்டிகளும் மற்றும் கார்பைன் ஸ்டென்கன் பிரிவில் 4 போட்டிகளும் நடைபெறுகின்றன. தமிழக காவல் துறையில் பெண்கள் கடந்த 1973ம் ஆண்டு சோ்க்கப்பட்டனா்.
இதன் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு, தேசிய அளவில் பெண் போலீஸாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி, தமிழக காவல் துறை சாா்பில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா ராஜரத்தினம் விளையாட்டரங்கில் ஜூன் 20-ம் தேதி மாலை நடைபெறுகிறது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வெற்றியாளா்களுக்கு பரிசுகள், கோப்பைகளை
வழங்குகிறாா். இந்த நிகழ்ச்சியில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பாலநாகதேவி, தாம்பரம் ஆணையராக இணை ஆணையர் மகேஷ்வரி, பால நாகஜோதி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரனீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.