தஞ்சையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை


ஆணையத்தின் விசாரணை

தஞ்சாவூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாகத் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர், இன்று தஞ்சையில் விசாரணை நடத்தினர்.

ஆணையத்திடம் விளக்கமளிக்க வந்திருந்த ஊர் மக்கள் மற்றும் மாணவிகள்

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய போலீஸார், மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர்.

ஆனால், விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என இந்து அமைப்புகள் பிரச்சினையைக் கிளப்பின. மதம் மாற வற்புறுத்தியதாக, பள்ளி நிர்வாகத்தின் மீது மாணவியின் பெற்றோர் காவல் துறையிடம் புகார் அளித்தனர். வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. மேலும் இதை வலியுறுத்தி பாஜகவினர் உள்ளிட்ட இந்து அமைப்பினர், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்த முன்வந்தது. அதன் தலைவர் பிரியங்கா கனூங்கோ, உறுப்பினர்கள் மதுலிகா சர்மா, கத்யாயினி ஆனந்த் ஆகியோர் இன்று காலை தஞ்சைக்கு வந்து இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டனர். இதில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி, முதன்மைக் கல்வி அலுவலர் மு. சிவக்குமார், மாவட்டக் கல்வி அலுவலர் குழந்தைராஜன் மற்றும் மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் என பலரும் ஆஜராகி உள்ளனர்.

மேலும் ஆணையத்தினரிடம் தங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்க மைக்கேல்பட்டி கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர்.

x