பாஜக பெண் நிர்வாகி மீது போலீஸ் வழக்குப் பதிவு


சவுதா மணி

காவல் துறை எச்சரிக்கையை மீறி, சமூக வலைதளத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக பாஜக பெண் நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பதிவு

‘மதத்தின் பெயரில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளை பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவற்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என சென்னை காவல் ஆணையார் சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் இரு மதத்தினரிடையே கலவரத்தைத் தூண்டும் வகையிலும் (இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள சர்ச்சை இடிக்காமல், இந்து கோவில்கள் இடிக்கப்படுவதாக), உயர் நீதிமன்ற நீதிபதிகளை அநாகரிகமாகப் பேசியும் மர்ம நபர் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சவுதா மணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “தைரியமா? விடியலுக்கா?” என குறிப்பிட்டிருந்தார்.

இதைச் சுட்டிக்காட்டி, மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் வதந்தி பரப்பும் சவுதா மணி மீது நடவடிக்கை எடுக்ககோரி, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

சவுதாமணி ட்விட்டர் பக்கம்

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார், சவுதா மணி கருத்து பதிவிட்டதை உறுதி செய்ததை அடுத்து, அவர் மீது அரசுக்கு எதிராக கலகம்செய்யத் தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய இரு பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதேபோல் கடந்த 28-ம் தேதி, பாஜக நிர்வாகி வினோஜ் பி.செல்வம் மீது மதக்கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக, சைபர் கிரைம் போலீஸார் 3 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

x