21வது கிராண்ட் ஸ்லாம் பட்டம்; ரபேல் நடால் வரலாற்று சாதனை


ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் டானியல் மெட்வதேவை ஐந்தரை மணி நேரம் போராடி வென்ற ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால், 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார். இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் தரவரிசையில் 2ம் நிலை வீரரான டேனில் மெட்வெடேவ் ஸ்பெயினின் ரபேல் நடாலை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், முதல் சுற்றை 2-6 என்ற கணக்கிலும், 2வது செட்டை 2-0 என்று மெட்வடேவ் கைப்பற்றிய நிலையில், மூன்றாவது செட்டிலும் அவர் 3-2 என முன்னிலை வகித்த நிலையில், சற்றும் மனம் தளராமல் உறுதியுடன் போராடிய நடால் 6-4, 6-4 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

நடால்

இதனால் சாம்பியன் ஆகப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஐந்தாவது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. 5 மணி, 24 நிமிடத்துக்கு நீடித்த இந்த போராட்டத்தில், நடால் 2-6, 6-7 (5-7), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி 2வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார். ஏற்கெனவே நடால், மெல்போர்னில் 2009ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

கிராண்ட் ஸ்லாம் வேட்டையில் மும்மூர்த்திகளான பெடரர், நடால், ஜோகோவிச் தலா 20 பட்டங்களுடன் சமநிலையில் இருந்தனர். ஆஸ்திரேலியா ஓபனில் கோப்பையை கைப்பற்றியதால், 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் நடால் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். காயம் காரணமாக பெடரரும், கரோனா தடுப்பூசி போடாததால் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாலும், நடாலின் உலக சாதனை வாய்ப்பு பிரகாசமானது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

x