சேலம் மாநகராட்சியை கைப்பற்றப் போவது யார்?


சேலம் மாநகராட்சி

சேலம் மாநகராட்சியில் மொத்தம் 4 மண்டலங்கள், 60 வார்டுகள் உள்ளன. கடந்த 1994-ம் ஆண்டு சேலம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தின் 5-வது பெரிய மாநகராட்சியாக சேலம் உள்ளது.

முதல் மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவியை திமுக கைப்பற்றியது. இதற்கடுத்து 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவும், 2006-ல் திமுக, 2011-ல் அதிமுகவும் மேயர் பதவியைக் கைப்பற்றினர். இம்முறை மேயர் பதவியை எந்தக் கட்சி கைப்பற்றப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் நடைபெற்ற மேயர் தேர்தலின்போது திமுக தரப்பில் மேயர் வேட்பாளர் தேர்வு என்பது, கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளாரும் முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அவரது மறைவுக்குப் பின், திமுகவில் மேயர் வேட்பாளர் தேர்வு மத்திய மாவட்ட செயலாளராக உள்ள சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அதனால் அவரது ஆதரவாளர்களில் ஒருவர் மேயராக தேர்வுசெய்ய வாய்ப்புள்ளது.

சேலம் மாநகராட்சி

அதிமுகவைப் பொறுத்தவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை, அவரது நேரடிப் பார்வையில் மேயர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். அங்கும் தற்போது நிலைமை மாறி, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நேரடிப் பார்வையில் அதிமுக மேயர் வேட்பாளர் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2001-ம் ஆண்டு திமுக கூட்டணியில் மேயர் பதவி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது திமுக எதிர்க்கட்சி. ஆனால், தற்போது திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் சேலம் மாநகராட்சி பதவியை, திமுக தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

அதிமுகவில் இதுவரை சேலம் மாநகராட்சி மேயர் பதவி கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதில்லை. இம்முறை மேயர் பதவி மறைமுக தேர்தல் என்றபோதிலும் அதிமுகவே தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மாநகராட்சி மேயர் பதவியைப்பெற தற்போதே காய்நகர்த்தத் தொடங்கியுள்ளனர். திராவிடக் கட்சிகளின் தொடக்கமாக இருந்த வரலாற்றைக் கொண்டது சேலம்.

அதனால் இம்முறை சேலம் மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றப்போவது திமுகவா, அதிமுகவா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

x