‘உண்மையான இந்துத்துவவாதி ஜின்னாவை கொன்றிருப்பார்’


காந்தி - கோட்சே

’உண்மையான இந்துத்துவவாதி என்பவர் மகாத்மா காந்தியை கொன்றிருக்க மாட்டார். பிரிவினைக்கு காரணமான ஜின்னாவையே கொன்றிருப்பார்’ இப்படியொரு கருத்தினை வெளியிட்டிருக்கிறார் சிவசேனா எம்பியான சஞ்சய் ரௌத்.

1948, ஜன.30 அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். மகாத்மா மறைந்த நாளான இன்றைய(ஜன.30) தினத்தை தியாகிகள் தினமாக நாடு கொண்டாடுகிறது. இதனையொட்டி, மகாத்மாவின் நினைவைப் போற்றும் விதமாகவும், கோட்சேவை சாடும் விதமாகவும் அரசியல் பிரபலங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

கோட்சே ஓர் இந்துத்துவர் என்பதால் அவருக்கு ஆதரவாக, தற்போதைய இந்துத்துவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் முகமான பாஜகவைச் சேர்ந்த பலரும், கோட்சேவை கொண்டாடி வருகிறார்கள். ஆனால் இன்னொரு இந்துத்துவ கட்சியான சிவசேனாவின் குரல் வேறு தொனியில் ஒலிக்கிறது.

சிவசேனா எம்பி சஞ்சய் ரௌத்

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ரௌத், இன்றைய தினம் பங்கேற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது குறித்த பேச்சு எழுந்தது. அப்போது கருத்து தெரிவித்த சஞ்சய் ரௌத், ‘உண்மையான இந்துத்துவவாதி, காந்தியை கொன்றிருக்க மாட்டார்’ என்று அதிரடித்தார். மேலும் பேசுகையில், “உண்மையான இந்துத்துவவாதி என்பவர், பாகிஸ்தானை அமைத்தே தீர வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்து, பிரிவினைக்கு காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவை வேண்டுமானால் கொன்றிருப்பார். மாறாக ஓர் இந்துத்துவவாதி காந்தியை கொன்றிருக்க மாட்டார்” என்றார்.

கடந்த சில வருடங்களாக, பாஜக - சிவசேனா என இந்துத்துவ கட்சிகள் இரண்டும் எதிரெதிர் நிலைப்பாடுகளை கொண்டுள்ளன. அந்த வகையில் பாஜகவினரால் விதந்தோதப்படும் கோட்சேவுக்கு எதிரான கருத்தினை சிவசேனா எம்பி பதிவு செய்துள்ளார்.

x