5 மாநில தேர்தல் தொடர்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், ராமர் கோயில் படம் இடம் பெற்றிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்தார் விவசாயத் தலைவர் ராகேஷ் திகாய்த்.
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இவை தொடர்பான விவாதம் இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொள்வதற்காக விவசாய சங்கங்களின் தலைவர் ராகேஷ் திகாய்த் வந்திருந்தார். அப்போது, ‘விவசாயிகளின் முதல்வர் யார்?’ எனும் தலைப்பிலான அந்த விவாத மேடையின் பின்னணியில் ராமர் கோயில் படம் இடம் பெற்றிருந்தது.
இதை பார்த்ததும் ராகேஷ் திகாய்த் அதிருப்தியடைந்தார். ‘ராமர் கோயில் படம் இங்கு காண்பிக்கப்படுவது ஏன்? யார் கூறியதன் பேரில் இப்படம் இங்கு காட்டப்படுகிறது? நீங்கள் ஏன் இதை விளம்பரப்படுத்துகிறீர்கள்?’ என்றெல்லாம் நெறியாளரிடம் கேள்விகள் எழுப்பினார். தொலைக்காட்சியின் நேரடி ஓளிபரப்பின் மத்தியில் திகாயத் இந்தக் கேள்விகளை எழுப்பினார்.
மேலும், ‘உங்கள் தொலைக்காட்சி மத துவேஷத்தை கிளப்ப முயல்கிறது. பாபர் மசூதி-ராமர் கோயில் போன்ற படங்களுக்கு பதிலாக ஒரு மருத்துவமனையின் படத்தைக் காட்டலாமே?’ எனவும் திகாய்த் கேள்வி எழுப்பினார்.
இதற்கு நெறியாளர் அளித்த விளக்கத்தில் திருப்தியடையாத திகாய்த், தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாகக் கூறிக் கிளம்பினார். இதற்கு முன்பாக, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும், உபி தேர்தலில் மதநல்லிணக்கத்தை குலைக்கும் பிரச்சாரம் முன்னிறுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தி இருந்தார்.
இது குறித்து பாரதிய கிஸான் சங்கத்தின் தலைவரான ராகேஷ் திகாய்த் கூறுகையில், ‘உபி தேர்தலில் விவசாயிகள் பிரச்சினையும், வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் பேசப்பட வேண்டும். இதை விடுத்து, முகம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் என்றெல்லாம் பேசி, இந்து-முஸ்லிம்களை பிரிக்கும் வகையில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. தங்கள் பயிர்களுக்கு உரிய விலையின்றி மின்சாரக் கட்டணம் செலுத்த முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர். இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். இவற்றை எல்லாம் பேசாமல், மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பிரச்சாரம் செய்யும் கட்சிகளுக்கு இந்த தேர்தலில் வெற்றி கிடைக்காது’ எனத் தெரிவித்தார்.
எனினும், இந்து-முஸ்லீம் ஒற்றுமையை குலைக்கும் பிரச்சாரம் செய்யும் கட்சி என யாருடைய பெயரையும் திகாய்த் குறிப்பிடவில்லை. தொடர்ந்து பாஜகவிற்கு எதிராகப் பேசிவரும் ராகேஷ் திகாய்த், தான் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் தேர்தலில் பிரச்சாரம் செய்யப்போவதில்லை எனவும் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.