சென்னை: ரேஷன் கடைகளில் மசூர் பருப்பைவிநியோகிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.150 கோடி மிச்சமாகும்போது அதிக விலை கொண்ட கனடியன் மஞ்சள் நிற பருப்பை கொள்முதல் செய்வது ஏன் என தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பருப்பு மொத்த வியாபாரம் செய்து வரும் தனியார் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: சிவப்பு நிறம் கொண்ட மசூர்பருப்பை குறைந்த விலையில் மாநிலங்கள் பெற்று, பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விநியோகிக்கலாம் என மத்திய உணவுத் துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுமதியளித்து கடிதம் அனுப்பியுள்ளது.
ஆனால் தமிழக அரசு பொது விநியோக திட்டத்துக்கான இ-டெண்டரில் மசூர் பருப்பை சேர்க்கவில்லை. அதன் ஊட்டச்சத்தை கருத்தில் கொண்டு 2017-ல் கொள்முதல் பட்டியலில் மசூர் பருப்பை மீண்டும் சேர்த்தாலும் பிப்.14 அன்று தமிழக அரசு பிறப்பித்துள்ள இ-டெண்டர் அறிவிப்பில் மசூர் பருப்பு இடம்பெறவில்லை.
இதனிடையே கனடியன் மஞ்சள்நிற துவரம் பருப்பை வாங்க தமிழகஅரசு டெண்டர் வழங்கியுள்ளது. மசூர் பருப்பைக் காட்டிலும் கனடியன் மஞ்சள் நிறபருப்பு விலைஅதிகமானது. எனவே முன்பு போல மசூர் பருப்பை கொள்முதல்செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ், விலை குறைந்த மசூர் பருப்பை கொள்முதல் செய்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.150 கோடி மிச்சமாகும் என வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசுதலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘மசூர் பருப்பை விட துவரம்பருப்பையே பொதுமக்கள் விரும்புகின்றனர். அதேநேரத்தில் மசூர் பருப்புக்கு எந்த தடையும் விதிக்கவில்லை” என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலை கொண்ட மசூர் பருப்பை வழங்காமல், அதிக விலை கொண்ட கனடியன் மஞ்சள் நிற பருப்பு எந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு இரு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.