நாகர்கோவில் மாநகராட்சியைக் கைப்பற்றப் போவது யார்?


நாகர்கோவில் மாநகராட்சி

மொத்தம் 52 வார்டுகளைக் கொண்ட நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் என்னும் தகுதியை எட்டிப்பிடிக்க திமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முந்தைய அதிமுக ஆட்சியில் நாகர்கோவிலில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவின் போது, நாகர்கோவிலை மாநகராட்சியாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. அதன் பின்னாலேயே பாஜகவின் அழுத்தம் இருந்தது. காரணம் நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோதே, பாஜக இங்கு தலைவர் பதவியைக் கைப்பற்றியிருந்தது. கடைசியாக நகராட்சியாக இருந்த நாகர்கோவில் பாஜகவின் வசம்தான் இருந்தது. பொன்.ராதாகிருஷ்ணனின் ஆசியோடு, இங்கு ஏற்கெனவே இருமுறை நகர்மன்றத் தலைவராக இருந்த மீனா தேவ், மேயர் ரேஸில் பாஜகவினரால் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

திமுகவைப் பொறுத்தவரை, நாகர்கோவில் மாநகரச் செயலாளர் வழக்கறிஞர் மகேஷை மேயருக்கு நிறுத்தும் திட்டம் இருக்கிறது. கடந்த சிலமாதங்களுக்கு முன்பு, சிறந்த மாநகரச் செயலாளர் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து விருதும் பெற்றார் மகேஷ். இதுமட்டும் இல்லாமல் மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன், அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோரது ஆதரவும் இருப்பதால் தெம்பாக வலம்வருகிறார் மகேஷ்.

எம்.ஆர்.காந்தி

நாகர்கோவிலைப் பொறுத்தவரை திமுக, பாஜக இடையேதான் மேயர் பதவிக்கான ரேஸில் கடும்போட்டி நிலவுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்திய தெம்புடன் இருக்கின்றனர் பாஜகவினர். ஆனால், அந்த வெற்றி எம்.ஆர்.காந்தி என்னும் பாஜக வேட்பாளரால் சாத்தியமானது என்பதையும் பாஜகவினர் ஆழமாக உள்வாங்கியிருக்கின்றனர். வயதால் எழுபதைக் கடந்த எம்.ஆர்.காந்தி, காலுக்கு செருப்புக் கூட அணியாமல் வலம்வருபவர், திருமணம் செய்துகொள்ளாதவர் என அனுதாப அலையால் எளிதாகக் கரை சேர்ந்தார். அந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்த அனுதாப அலை இப்போது இருக்குமா என்பது கேள்விக்குறி. ஆனாலும் பொங்கலுக்கு திமுக அரசு பணம் வழங்கவில்லை என்பதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாகவே முன்னெடுத்து, அதில் நன்கு கவனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது பாஜக!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், பாஜக கூட்டணியில் அதிமுகவும் ஒரே கோணத்தில் அணுகப்படுகின்றன. இருதரப்புக்கும் அதிகபட்சம் 15 சீட்டுகளுக்குள் கொடுத்து கணக்கை முடிக்க பாஜக, திமுக தரப்பு முனைப்பு காட்டுகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. அண்மையில் புதிதாக சேர்க்கப்பட்ட பேரூராட்சி பகுதிகளில் வலுவாக இருக்கும் இந்து வாக்குகள், தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என கணக்குப் போடுகிறது பாஜக. அதேநேரம், நாகர்கோவில் மாநகருக்குள் வரும் கணிசமான சிறுபான்மையினர் வாக்குகளும், கூடவே பாஜகவுக்கு எதிரான வாக்குகளையும் ஒன்றிணைத்து பெரும்பான்மை கவுன்சிலர்களைப் பெற திமுகவும் காய் நகர்த்துகிறது.

முதல் மேயர் என்னும் தகுதி எந்தக் கட்சியின் கரங்களுக்குள் செல்லப் போகிறது? என எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது நாகர்கோவில் மாநகராட்சி!

x