துரி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பகவந்த் மான்!


ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராகக் களமிறக்கப்படும் பகவந்த் மான், துரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இன்று (ஜன.29) வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

1973-ல் பஞ்சாபின் சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள சதோஜ் கிராமத்தில் பிறந்தவர் பகவந்த மான். 2011-ல் மன்ப்ரீத் சிங்கின் பஞ்சாப் மக்கள் கட்சியில் இணைந்ததன் மூலம், தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 2014-ல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். சங்க்ரூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இரு முறை போட்டியிட்டு வென்றவர், அந்தத் தொகுதியில் அடங்கும் துரி சட்டப்பேரவைத் தொகுதியில் இந்த முறை களம் காண்கிறார். இதற்கு முன்னர், 2012 சட்டப்பேரவைத் தேர்தலில் லெஹ்ராகாகா தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றவர் அவர். அதேபோல், 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆஆக சார்பில் அகாலி தளம் வேட்பாளரான சுக்பீர் சிங்கிடம் தோல்வியடைந்தார்.

2017 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 20 தொகுதிகளில் வெற்றி கிடைத்து, பிரதான எதிர்க்கட்சி ஆனது. இந்த முறை காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி அரியணையில் ஏற கடும் முயற்சிகளில் அக்கட்சி இறங்கியிருக்கிறது.

சங்க்ரூர் மண்ணின் மைந்தரான பகவந்த் மான், "துரி தொகுதியைச் சேர்ந்த அனைவரும் என்னைத் தங்கள் உறவினராகவே பார்க்கின்றனர். சங்க்ரூர் மக்களவைத் தொகுதியில் நான் இருமுறை வென்றபோது, துரியில் எனக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. எனவே இந்தத் தேர்தலில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். ஆம் ஆத்மி கட்சி 80-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்” என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

117 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில், பிப்ரவரி 20-ல் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.

x