தமிழகத்துக்கு எம்.பி.க்கள் பெருமை சேர்க்க வேண்டும்: கோவை முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை


கோவை: வாக்களித்த மக்களுக்கு உண்மையாக செயல்பட்டு, தமிழகத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா,மக்களவைத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தொடர் வெற்றிக்கு வழிவகுத்த முதல்வர் ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் சு.முத்துசாமி வரவேற்றார். தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்துக்கு 8 முறை வந்த பிரதமர் மோடி கட்டமைத்த பிம்பத்தை, ராகுல்காந்தி ஒரே ஒரு `ஸ்வீட்பாக்ஸ்' கொடுத்து உடைத்தார். அன்று அவர் வழங்கிய இனிப்பு, எதிர்க்கட்சியினரின் கணிப்புகளை பொய்யாக்கியது. இந்த வெற்றி விழா தனிப்பட்ட ஸ்டாலினுக்கு நடக்கும் பாராட்டு விழா அல்ல, மேடையில் உள்ள இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் சேர்த்து நடக்கும் பாராட்டு விழா. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி, திமுக அரசு மேல் நம்பிக்கைவைத்து, வாக்களித்த மக்களுக்கு கிடைத்த வெற்றி.

2004 கருத்துக் கணிப்புகள் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும்என்றன. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. தற்போது பாஜக 400 இடங்களைக் கைப்பற்றும் என்றனர். அதை உடைத்து, பாஜக தனித்து அரசமைக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை, அம்பேத்கர் வழங்கிய சட்டப் புத்தகம் முன் தலைகுனிந்து நிற்கச் செய்திருக்கிறோம். இது இண்டியா கூட்டணியின் 41-வது வெற்றி.

தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசினர். சிறுபான்மையின மக்களை தரக்குறைவாகப் பேசினர். உத்தர பிரதேசம், ஒடிசாவில் தமிழர்களை கொச்சைப்படுத்தினர். ஏராளமானபொய் செய்திகளை வாட்ஸ்அப்மூலம் பரப்பினர். இத்தனைக்குப் பிறகும் பாஜக 240 தொகுதிகளில்தான் வென்றது. எனவே, இது மோடியின் வெற்றி அல்ல, மோடியின் தோல்வி.

இந்த தேர்தலில் அரசியலமைப்பு சட்டமும், ஜனநாயகமும் வென்றுள்ளன. பாஜவுக்கு எதிராக 237 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே, முன்புபோல நினைத்ததை எல்லாம் பாஜக செய்ய முடியாது. தற்போதுகூட தமிழகத்தில் இருந்து 40 எம்.பி.க்கள் நாடாளுமன்றம் செல்வதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்புகின்றனர். ஜனநாயக அடிப்படை தெரியாதவர்கள்தான் இப்படிக் கேட்டு, வாக்களித்த மக்களை இழிவுபடுத்துகின்றனர். 40 பேர் கேன்டீனில் வடை சுடுவார்கள் என்கிறார்கள். வாயால் வடை சுடுவது உங்கள் வேலை. எங்கள் எம்.பி.க்கள் கருத்துகளால் உங்கள் ஆணவத்தை சுடுவார்கள்.

மக்களுக்கான நமது குரல்நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கப் போகிறது. பாஜகவின் வகுப்புவாத அரசியல், பாசிசத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் பேசுவார்கள். மற்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக்காட்டாக திமுக எம்.பி.க்களின் உரைகள் அமைய வேண்டும்.

தமிழக மக்களுக்காக, உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசுங்கள். வாக்களித்த மக்களுக்கும், கட்சிக்கும் உண்மையாக செயல்பட்டு தமிழகத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும். அரசியல் சாசனத்தை மாற்றத் துடிக்கும் பாஜகவை தடுக்க, காவல் அரணாக 40 எம்.பி.க்களும் இருப்பார்கள்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

விழாவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மநீம துணைத் தலைவர் ஏ.ஜி.மெளரியா, கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் இரா.அதியமான் உள்ளிட்டோர் பேசினர். கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் நன்றி கூறினார்.

x