தமிழகத்தில் வாட்ஸ்அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம்


சென்னை: தமிழகத்தில் வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை, மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழக மின்வாரியத்துக்கு வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என மொத்தம் 3.5 கோடி இணைப்புகள் உள்ளன. நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தைக் கணக்கெடுக்க இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்படுகிறது.

இந்த மீட்டரில் பதிவாகும் மின்நுகர்வை மின்வாரிய ஊழியர்கள் கணக்கெடுத்து அதற்கேற்ப மின்கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இந்த மின்கட்டணத்தை நுகர்வோர் மின்வாரிய பிரிவு, அலுவலகங்களில் உள்ள கவுன்ட்டர்கள், மொபைல் செயலி மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி உள்ளது.

இந்நிலையில், வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, 500 யூனிட்டுக்கு மேல் மின் பயன்பாடு உள்ள நுகர்வோர் வாட்ஸ்அப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்.

இதற்கு, நுகர்வோர் தங்களுடைய மின்இணைப்புடன் வாட்ஸ்அப் வசதியுடன் கூடி மொபைல் எண்ணை இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் மின்கட்டணம் விவரம் அனுப்பி வைக்கப்படும். நுகர்வோர் தங்களுடைய வாட்ஸ் அப்பில் யுபிஐ மூலம் மின்கட்டணத்தைச் செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தி உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின்வாரியம் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x