‘தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்தை வைத்து, தமிழகத்தில் பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றனர்’ என உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில், பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி, தற்கொலை செய்து கொண்டார். மாணவியை விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரியை(62) போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அந்த மாணவி, ‘தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக’ பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி, அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரரின் வழக்கறிஞர் கார்த்திக்கேய வெங்கடாச்சலபதி வாதிடும்போது, “விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். செல்போன், சிடி உள்ளிட்ட பொருட்களை ஹைதராபாத் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதிக்க வேண்டும்” என்றார்.
அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் வாதிடும்போது, ‘‘இந்த வழக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 53 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வாக்குமூலங்கள் முழுமையாக பதிவு செய்யப்படுகின்றன. அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு தயாராக உள்ளது. எதையும் மறைக்கவேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.
மாணவியின் வீடியோ ஜன.17-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜன.20 வரை மதமாற்றம் தொடர்பான சர்ச்சை எழுவில்லை. மாணவி உயிரிழக்கும் வரை காத்திருந்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதில் உள்நோக்கம் உள்ளது. தமிழகத்தில் பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர். டிஎஸ்பி நேர்மையாக விசாரணை நடத்தி வருகிறார்” என்றார்.
மாணவி படித்த பள்ளி நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் வாதிடும்போது, “எங்கள் பள்ளி 160 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்துக்கள், இஸ்லாமிய மாணவர்கள் அதிக அளவு பயில்கின்றனர். எங்கள் பள்ளியில் யாரும் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. தற்கொலை செய்து கொண்ட மாணவி நன்றாகப் படிக்கக்கூடியவர். அவர் தற்கொலையால் வருந்துகிறோம். அவரது தற்கொலை தற்போது அரசியலாக்கப்பட்டுள்ளது. எந்த விசாரணைக்கும் பள்ளி நிர்வாகம் தயாராக உள்ளது” என்றார்.
இதையடுத்து வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.